search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி படுகொலை: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் இடைநீக்கம்
    X

    போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி படுகொலை: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் இடைநீக்கம்

    போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் உத்தரவிட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன் (வயது 47). இவர், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்த பசுபதிபாண்டியனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இவர் மீது போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    சிங்காரம் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 24-ந் தேதி, அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த சிங்காரத்தை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி தூத்துக்குடியை நோக்கி அழைத்து வந்தனர்.

    சிங்காரத்தின் பாதுகாப்புக்காக அந்த ஜீப்பில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு தலைமையில் போலீஸ்காரர்கள் பாலசுப்பிரமணியன், பிரின்ஸ்டன், பிரகாஷ் ஆகியோர் உடன் சென்றனர். ஜீப்பை போலீஸ்காரர் பிரகாஷ் ஓட்டி வந்தார்.

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் சென்ற போது மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல், போலீஸ் ஜீப்பை வழிமறித்தனர். மிளகாய் பொடி கலந்த தண்ணீரை தெளித்து போலீசாரை நிலைகுலையச் செய்து, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கைதி சிங்காரத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

    இதற்கிடையே கைதி சிங்காரத்தை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் போது, பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு, போலீஸ்காரர்கள் பாலசுப்பிரமணியன், பிரின்ஸ்டன், டிரைவர் பிரகாஷ் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு உள்ளிட்ட 4 போலீசாரையும், பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் நேற்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கைதி சிங்காரம் கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று ஒருவர் சிக்கினார். விசாரணையில் அவர், நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த அகஸ்டின் என தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரித்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் குமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த அருள்மணி என்பவர் மதுரையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அருள்மணியை சுற்றி வளைத்து பிடித்தனர். அகஸ்டின், அருள்மணி ஆகிய 2 பேரையும் கைது செய்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர். சிங்காரம் கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×