search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் மின்சாரம் தாக்கி அதிகாரி- ஊழியர் பலி
    X

    சேலத்தில் மின்சாரம் தாக்கி அதிகாரி- ஊழியர் பலி

    சேலத்தில் இன்று காலை மின்சாரம் தாக்கி அதிகாரி மற்றும் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டியில் மின்சார வாரியம் அலுவலகமும், துணை மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

    அப்போது, உடையாப்பட்டி மின் வாரியத்தின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளுக்கு சென்று மின் குறைபாடுகளை சரி செய்வார்கள். வழக்கம் போல் இன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதற்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உடையாப்பட்டி தொழிற்பேட்டையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணிகளை மின்வாரிய ஊழியர்கள் செய்து கொண்டிருந்தனர்.

    இந்த பராமரிப்பு பணியில் போர்மேன்கள் சரவணன், முத்துசாமி ஆகியோர் தலைமையில் மின்பாதை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், வயர்மேன்கள் செல்வராஜ், ராமசாமி, சந்திரசேகர், உதவியாளர் முருகன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மின்பாதை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவியாளர் முருகன் ஆகியோர் கயிறு கட்டிக் கொண்டு டிரான்ஸ் பார்மரில் ஏறி மேலே அமர்ந்து கொண்டு மின் கம்பிகளை சரி செய்து கொண்டிருந்தார்கள்.

    அப்போது மின் நிறுத்தம் காரணமாக தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளுக்காக ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. தொழிற்பேட்டையில் உள்ள மின்மாற்றியை மாற்றாமல் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் அதில் உள்ள மின்சாரம் டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பியில் பாய்ந்தது.

    இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணனையும், முருகனையும் மின்சாரம் தாக்கியது. இதில் 2 பேரும் டிரான்பார்மரிலேயே சுருண்டு விழுந்து பலியாகினர்.

    உடனே சக ஊழியர்கள் ஓடி சென்று ஜெனரேட்டரை நிறுத்தி விட்டு, 2 பேரின் உடலையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான பாலகிருஷ்ணன் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர்.

    இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், தீன தயாளன் என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இதில் தீனதயாளன் இ.இ.இ. படித்து முடித்துள்ளார். லாவண்யா தற்போது இ.இ.இ. படித்து வருகிறார்.

    மேலும் பலியான முருகன் சேலம் அருகே உள்ள குப்பனூர், கொட்டாயூர் காட்டுவளவு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவருக்கு கவிதா என்ற மனைவியும், 10-ம் வகுப்பு படித்து வரும் தேவிகா என்ற மகளும், 6-ம் வகுப்பு படித்து வரும் கோகுல் என்ற மகனும் உள்ளனர்.

    Next Story
    ×