search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு: கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடிவு
    X

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு: கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடிவு

    குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கல்குவாரி குட்டைகளில் தேங்கி உள்ள தண்ணீரை சுத்திகரித்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பொய்த்து போனதால் ஏரிகளில் எதிர்பார்த்தபடி தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது. இது தவிர வீராணம் ஏரியில் இருந்தும், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    தற்போதைய நிலையில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி ஆகும். ஆனால் இப்போது 1.678 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் ஒரு மாதம் மட்டுமே குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.



    இந்த நிலையில் கல்குவாரி குட்டைகளில் தேங்கி உள்ள தண்ணீரை சுத்திகரித்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதன்படி சென்னை புறநகர் பகுதிகளிலுள்ள கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை குடிநீர் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியுமா என்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள சென்னைக் குடிநீர் வாரிய பொறியாளர்களுக்கு குடிநீர் வாரிய இயக்குனர் அருண்ராய் அறிவுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து கல்குவாரிகளில் தேங்கி இருக்கும் மழைநீர் குடிநீர் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பதற்கான ஆய்வுகளையும், குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரின் இருப்பு குறித்த ஆய்வுகளையும் சென்னை குடிநீர் வாரிய பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை புறநகரில் மாங்காடு பகுதியில் 22 குவாரிகளும் திருநீர்மலையில் 3 குவாரிகளும் பம்மலில் 3 குவாரிகளும் நன்மங்கலத்தில் 3 குவாரிகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த குவாரிகளில் உள்ள நீரின் தரம் மற்றும் அளவீடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நீரின் தரம் குறித்து கிங்நிலையம் (கிண்டி) மற்றும் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் புவி அமைப்பியல் துறையும் குவாரிகளின் நீர் இருப்பு குறித்து எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, சிவில் பொறியியல் துறையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    குவாரிகளிலுள்ள நீர் பயன்பாட்டிற்கு உகந்தது என்று கண்டறியப்பட்டால் கோடையை சமாளிக்கும் விதத்தில் இந்தக் குவாரிகளில் உள்ள நீரைப் பயன்படுத்திக் கொள்ள வாரியம் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
    Next Story
    ×