search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்: அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்
    X

    ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்: அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்

    ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள் என அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கூறி இருப்பதாவது:-

    `அம்மா’ என்று கோடானு கோடி மக்கள் பாசத்தோடு அழைத்து, தங்களுக்காக மண்ணுலகில் வந்துதித்த வானத்து தேவதை என்று போற்றிக் கொண்டாடிய நம் அன்புக்குரிய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் 69ஆவது பிறந்த நாள் 24.2.2017. ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்த இந்த இனிய நாள்.

    இந்த ஆண்டு இத்தனை சோதனை மிகுந்ததாக அமைந்திடும் என்று நாம் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனாலும், காலத்தின் சுழற்சியில் இத்தகைய ஒரு வேதனையை நாம் சந்தித்துத் தீர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.

    எத்தனை துயர் வந்தாலும், எத்தனை இடர் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று துணிவுடன் போராடி, தனது மதிநுட்பத்தால் வென்று காட்டும் வாழ்க்கையை வாழ்ந்து நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் நம் புரட்சித் தலைவி அம்மா.

    இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடர்மிகு சூழலை புரட்சித் தலைவி அம்மாவின் இதயம் கொண்டு வெற்றி காண்பது தான் அம்மாவுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.

    தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு என்றும்; தான் வாழ்வதே மக்களுக்காகத் தான் என்றும்; `மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்றும் சித்தரித்து, நம்மிடையே வாழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழாக்களில், கடந்த காலங்களில் நாம் எப்படி ஏழை, எளிய மக்களுக்காக கொடை உள்ளத்தோடு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினோமோ அதைப் போலவும், இன்னும் அதைவிட கூடுதலாகவும் மக்களுக்கு இந்த ஆண்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கழகத்திற்கு வலுவூட்டும் செயல்களை செய்தும், புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில் நம்முடைய பணிகள் அமைந்திட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நாளில் அம்மா நம்மோடு இல்லையே என்ற எண்ணம் என்னை மென்மேலும் துயரத்திற்கு உள்ளாக்குகிறது. 33 ஆண்டுகள் அவருடைய பிறந்த நாளை அவர் கூடவே இருந்து கொண்டாடிய நான், இந்த ஆண்டு அவர் நினைவாக தனிமையில் துயருற்று இருக்கிறேன்.

    என் இதயமெல்லாம் அம்மாவின் நினைவே நிரம்பி இருக்கிறது. மகத்தான மக்கள் தலைவர் அவர். அம்மாவை ஒரு நொடி சந்தித்தவர் கூட வாழ்நாள் முழுவதும் அவரை நினைத்திருப்பார். அத்தகைய ஆளுமையும், கள்ளமில்லா வெள்ளை உள்ளமும் படைத்த வள்ளலின் வாரிசு நம் அம்மா.

    காலமெல்லாம் அம்மா புகழ் பாடிய வண்ணம் நம்முடைய வாழ்நாள் இருந்திட வேண்டும் என்று தான் நான் ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன். அம்மாவின் அன்பையும், பாசத்தையும், உழைப்பையும் எண்ணி, எண்ணி வேதனைக் கண்ணீர் வடிக்கிறேன்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அமைத்த ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டு திசை அறியாது கழக உடன் பிறப்புகள் கலங்கி இருந்த நேரத்தில் வழிகாட்டும் ஒளி விளக்காகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் வந்துதித்தார் நம் புரட்சித் தலைவி அம்மா.

    எதிரிகளும், துரோகிகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கழக அரசையும் வீழ்த்த நினைத்த நேரத்தில், அம்மாவின் ஆன்மா நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்தி, மக்களுக்கான அரசாகத் திகழும் நம் அம்மாவின் கழக அரசை நிலை நிறுத்தி இருக்கிறது.

    இந்த அரசு அம்மா தமிழக மக்களுக்காக மென்மேலும் நிறைவேற்ற நினைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, மக்கள் வாழ்வில் ஒளியேற்றி, எல்லோருக்கும் எல்லாமுமாய்த் திகழ்ந்து, அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்ற உறுதியோடு, புரட்சித் தலைவி அம்மாவின் 69ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமைந்திடட்டும்.


    ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்; இயன்ற இடங்களில் எல்லாம் அம்மாவின் மனது போல, அறுசுவை உணவுகளை அன்னதானமாகச் செய்யுங்கள்; கழகத்தின் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கட்டும்.

    எல்லாவற்றையும் விட கழக உடன்பிறப்புகள் வாழும் இடங்களில் எல்லாம் நம் அம்மாவின் திருஉருவப்படங்களை அழகுற பொதுமக்கள் பார்வைக்கு வைத்து மலர் அஞ்சலி செலுத்துங்கள்.

    கடந்த காலங்களில் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி நாம் அனைவரும் மகிழ்ந்தோம்.

    இந்த ஆண்டு அம்மாவின் நினைவோடு, அம்மாவின் உருவப்படத்தின் முன் நின்று `கழகத்தைக் காப்போம்’, `கழக அரசை நிலைநிறுத்தி மக்கள் பணியாற்றுவோம்’, `உங்கள் ஆன்மா என்றென்றும் எங்களுக்குத் துணை நிற்கட்டும்’ என்று கைகூப்பி வணங்கி பிரார்த்தித்து, அம்மாவின் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×