search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
    X

    உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

    உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரண உதவித் தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. வறட்சி நிவாரணம் குறித்து கடந்த 10.01.2017 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் சில பத்திகளை மட்டும் கூடுதலாக சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையை விட பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் சில பத்திகள் கூடுதலாக இருக்கின்றனவே தவிர உழவர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண நிதிஉதவி எந்த வகையிலும் உயர்த்தப்படவில்லை. நெல்லுக்கு ரூ.5,465, நீண்ட கால பயிர்களுக்கு ரூ.7,287, மானாவாரி பயிர்களுக்கு ரூ.3,000 என்ற அளவில் மட்டுமே இழப்பீடு வழங்குவது போதுமானதல்ல.

    நெல்லுக்கு பயிர்க்காப்பீட்டு மூலம் ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.4,800 மட்டுமே கிடைக் கும் என்பதால், அதை கழித்து குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை நிதி உதவி வழங்குவது தான் நியாயம். ஆனால் ஏக்கருக்கு ரூ.5,465 மட்டுமே வழங்கப்படும் என்பது யானைப்பசிக்கு சோளப்பொரியாகவே அமையும்.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் பேரிடர் நிவாரண உதவிகளின் படி நிதி உதவி வழங்கினால் போதுமானது என்ற அணுகுமுறை தவறானது; இது எந்திரத்தனமான சிந்தனையாகும். இது போன்ற சூழல்களில் விதிகளை புறந்தள்ளி வைத்துவிட்டு, வறட்சி யார், யாருக்கெல்லாம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது; அவற்றை எவ்வாறு சரி செய்ய முடியும்? என்ற கோணத்தில் சிந்தித்து நிவாரணத் திட்டத்தை வகுப்பது தான் சரியானதாக இருக்கும். பயிர்களை பயிரிட்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமையின் கொடுமையால் பயிர்களை பயிரிடவே முடியாதவர்களுக்கும், வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வது அரசின் கடமையில்லையா? இவர்களுக்கு ஒருமுறை நிதி உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.


    உழவர்களுக்கு அறிவித்துள்ள இழப்பீடு போதாது என்பதால், நிபந்தனையின்றி, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000, நீண்டகால பணப்பயிர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்றவகையில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

    அதிர்ச்சி மற்றும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த உழவர்கள் குறித்து கலெக்டர் மூலம் விவரங்கள் பெறப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த மாதம் அப்போதைய முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், இப்போதைய முதல்-அமைச்சரின் அறிவிப்பில் அது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 4 மாதங்களில் சுமார் 300 உழவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×