search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொத்தமேட்டுப்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயலும் காட்சி
    X
    பொத்தமேட்டுப்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயலும் காட்சி

    7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு

    மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 18-ந்தேதி அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தடை மற்றும் ஜல்லிக்கட்டு நடத்திட முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும் போன்ற காரணங்களால் கடந்த 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை.

    ஆனால் தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்திட கிராம மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்து, அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றனர்.

    இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின் படி, பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலயத்தின் வளாகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஆலய வளாகத்தின் ஒரு ஓரத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. காளைகள் செல்லும் பாதையில் இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதில் கம்பி வேலியும் அமைக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஸ்ரீரங்கம் கோட்டாட்சி தலைவர் ராஜராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பணிகளை பார்வையிட்டனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300-க்கும் மேற்பட்ட மாடு பிடிவீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    7 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றதால் இந்த ஜல்லிக்கட்டை மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக வந்து பார்வையிட்டனர். இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×