search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையில் முத்துக்கருப்பன் எம்.பி. பேட்டி அளித்த காட்சி.
    X
    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையில் முத்துக்கருப்பன் எம்.பி. பேட்டி அளித்த காட்சி.

    அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் ஆதரவு தர வேண்டும்: முத்துக்கருப்பன் எம்.பி.

    ஓ.பன்னீர் செல்வம் பின்னால் சென்றவர்கள் வருத்தம் தெரிவித்து அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஆதரவு தர வேண்டும் என முத்துக்கருப்பன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    அ.தி.மு.க. நெல்லை முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன் எம்.பி. உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது முத்துக்கருப்பன் எம்.பி. கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக வளர்த்தார். அத்தகைய கட்சிக்கு தொண்டர்கள், இளைஞர்கள் துரோகம் செய்ய கூடாது. நான் டெல்லியில் இருந்த போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவி ஏற்க போவதாக எனக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து நான் சென்னைக்கு வந்தேன். கவர்னரின் காலதாமதத்தால் சசிகலா முதல்வராக பதவி ஏற்க முடியாமல் போய் விட்டது.

    இந்த சூழ்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நான் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். பின்னர் நெல்லை வந்து சிகிச்சை பெற்று வருகிறேன். ஆகவே எனது நிலை பற்றி தெளிவாக தெரிவிக்க முடியாமல் போனது. இதற்கிடையே ஒரு சில தொலைக்காட்சிகளில் என்னுடைய ஆதரவு குறித்து தவறான தகவல் வெளியானது. இது எனது மனதை பாதித்தது.

    எனவே இன்று எனது நிலையை தெளிவுபடுத்துகிறேன். அ.தி.மு.க. கட்சி சின்னம், கொடி எங்கு இருக்கிறதோ அங்கு நானும் எனது ஆதரவாளர்களும் இருப்போம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எனது ஆதரவு தொடர்ந்து இருக்கும்.

    எனக்கு அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வழங்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வர் பதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவர் தற்போது கட்சிக்கு செய்துள்ள தவறை மன்னிக்க முடியாது.

    பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் அவரால் எப்படி ஆட்சி அமைக்க முடியும். அவரது செயல்பாடு தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தது என்பது தான் உண்மை. அ.தி.மு.க. தொடங்கப்பட்டதே தி.மு.க.வை எதிர்ப்பதற்குதான். ஆனால் தி.மு.க.வுக்கு சாதகமான நிலையை ஓ.பி.எஸ். எடுத்தது கண்டிக்கத்தக்கது. எம்.ஜி.ஆர். இறந்த போது ஜானகி அணி செய்த தவறை இப்போது ஓ.பி.எஸ். செய்துள்ளார்.

    ஆனால் அன்று கட்சி 2 துருவமாக பிளவுபட்டது. இப்போது கட்சியில் பிளவு ஏற்படவில்லை. எனவே ஓ.பி.எஸ். பின்னால் சென்றவர்கள் வருத்தம் தெரிவித்து அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஆதரவு தர வேண்டும்.

    மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து குறை கூறி வருகிறார். இதனால் மத்திய அரசு இந்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே பொன். ராதாகிருஷ்ணன் அரசை பற்றி குறை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×