search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு
    X

    நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு

    நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காலை 8 மணி வரை தொடர்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் இரவில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது.

    ‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை, கோடை காலத்தில் தீவிரமான வெயில் என காலநிலை மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய பனிக்காலம் தற்போது வரை நீடிக்கிறது. பொதுவாக ஜனவரி மாத இறுதியில் பனி குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலும் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.

    கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பனி மூட்டம் காணப்பட்டது. இன்று காலையில் நெல்லை சந்திப்பு, புதிய பஸ் நிலையம், பாளை உள்ளிட்ட பல இடங்களிலும் அதிக பனிப்பொழிவு இருந்தது. அருகில் நிற்பவர் கூட தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகனங்கள் அனைத்து விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

    தென்காசி, கடையம், அம்பை, களக்காடு, திசையன்விளை என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இன்று பனிப்பொழிவு அதிக அளவில் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் நிலவும் கடுமையான பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு பிறகும் பனிப்பொழிவு நீடிப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இரவில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. இன்றும் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இந்த பனிப்பொழிவு காரணமாக ரோட்டில் வாகனங்கள், விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. ஆனாலும் சிறிது தூரம் மட்டுமே பார்க்க முடிந்தது. எதிரே வரும் வாகனங்களை கூட பார்க்க முடியாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 96 விசைப்படகுகள் நேற்று காலையில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றன. இந்த படகுகள் சிறிது தூரம் சென்ற போது கடலுக்குள் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் முன்னால் செல்லும் படகை பார்க்க முடியவில்லை. இதனால் சில படகுகள் மீண்டும் கரை திரும்பின. அதே போன்று நாட்டுப்படகுகளும் கரைக்கு திரும்பின.

    திருச்செந்தூரில் இன்று காலை வெகுநேரமாக கடுமையான பனிப்பொழிவு இருந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி மூட்டம் காணப்பட்டது. அதனால் சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை இருந்தது. காலை 7.30மணிக்கு வாகன முகப்பு விளக்கை எரிய விட்டுதான் சென்றன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

    தெருக்களில் உள்ள தெருவிளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தது. கடுமையான குளிரால் மக்கள் நடமாடமுடியாத நிலை இருந்தது. இதே போன்று விளாத்திகுளம், கயத்தாறு, கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு இருந்தது.

    Next Story
    ×