search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் ரூ.2 கோடி நகையுடன் வியாபாரி தலைமறைவு: போலீசார் விசாரணை
    X

    ஆரணியில் ரூ.2 கோடி நகையுடன் வியாபாரி தலைமறைவு: போலீசார் விசாரணை

    ஆரணியில் 100 பேர் அடகு வைத்த ரூ.2 கோடி மதிப்பிலான நகையுடன் வியாபாரி தலைமறைவானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் வசித்தவர் ஜெகன் (வயது 38). இவர், ஆரணி ‌ஷராப் பஜாரில் நகை அடகு கடை வைத்து பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்தார்.

    வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நகை சீட்டும் நடத்தினார். இதில் சேர்ந்த மக்கள் மாதம் 500 முதல் 2000 ரூபாய் வரை செலுத்தினர். இதன் மூலம் ஜெகனுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வந்துள்ளது.

    பொதுவாக நகை அடகு வைக்கும் வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் 2 பைசா வட்டி வசூலிப்பது வழக்கம். ஆனால் ஜெகன் ஒன்றரை பைசா வட்டி மட்டுமே வசூலித்தார்.

    குறைந்த வட்டி என்பதால் இவர் கடையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் நகையை அடகு வைத்து இருந்தனர். இதேபோன்று வியாபாரிகளும் ஜெகனிடம் நகை அடகு வைத்தனர்.

    மற்ற வியாபாரிகள் நடத்தும் ஏல சீட்டில் ஜெகன் சேர்ந்துள்ளார். முதல், 2ம் மாத்தத்தில் சீட்டு ஏலம் எடுத்துள்ளார். பின்னர் அந்த பணத்தை ஒழுங்காக கட்டவில்லை.

    இந்த நிலையில், ஜெகனுக்கு கடன் தொல்லை அதிகமாகி கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அவரை நச்சரித்தனர்.

    இதையடுத்து ஜெகன் சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டை காலி செய்துள்ளார். பின்னர், தன்னுடைய ஏ.ஜே.எ. ஜெகன் அடகு கடையை இழுத்து பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    இந்த நிலையில் நகையை மீட்க ஜெகன் கடைக்கு வாடிக்கையாளர்கள் சென்றுள்ளனர். அங்கு கடை பூட்டப்பட்டிருந்ததை பார்த்து விசாரித்தபோது, ஜெகன் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

    இதுகுறித்து ஜெகன் அடகு கடை எதிரே அடகு கடை வைத்துள்ள முகமது அலி என்பவர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரில், என்னுடைய அடகு கடையில் நகை அடகு வைக்க வந்த 53 பேரின் நகையை, நான் ஜெகன் அடகு கடையில் கொடுத்து ஒன்றரை பைசா வட்டியில் 6 லட்சம் ரூபாய் வாங்கி இருந்தேன்.

    தற்போது ஜெகன் தலைமறைவாகி விட்டதால் அவரை கண்டு பிடித்து நகையை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதேபோல் ஆரணி, களம்பூர், படவேடு, மல்லிகாபுரத்தை சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட மக்களை ஏமாற்றி விட்டு ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணத்துடன் ஜெகன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×