search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஐகோர்ட்டு நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு
    X

    கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஐகோர்ட்டு நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு

    சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணியினை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவும் பங்கேற்றார்.
    மதுரை:

    தமிழகத்தில் நீராதாரத்தை பாதிக்கும் வகையில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐகோர்ட்டு கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் உடனடியாக சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த மரங்கள் அகற்றும் பணியினை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும். இதனை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து ஐகோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி பல மாவட்டங்களில் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்ற போதும், ஒருசில மாவட்டங்களில் மந்தமான நிலை காணப்பட்டது. இது தொடர்பாக ஐகோர்ட்டு கிளை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டபோது, நீதிபதிகள் சரியாக செயல்படாத மாவட்டங்களுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

    மேலும் தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அவர்களே அகற்ற வேண்டும். அப்படி அகற்றாதபட்சத்தில் அரசு சார்பில் அதனை அகற்றி அதற்கான தொகையினை இருமடங்காக வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் செல்வம், கிருபாகரன் ஆகியோர் திடீரென ஐகோர்ட்டில் இருந்து புறப்பட்டு கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஆய்வு செய்ய சென்றனர். அவர்களுடன் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவும் சென்றார்.

    அவர்கள் ஒத்தக்கடை, நரசிங்கம், கடச்சனேந்தல், காதக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நீதிபதிகள், கலெக்டரிடம் கூறுகையில், கருவேல மரங்கள் அகற்றும் பணி மந்தமாக உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம்தான் தீவிரப்படுத்த வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றில் விளம்பரப்படுத்த வேண்டும்.

    இந்த மரங்களை அனைத்து பகுதிகளிலும் அடியோடு அகற்ற வேண்டும். நீதித்துறை உத்தரவு மட்டும்தான் போட முடியும். அதனை செயல்படுத்த வேண்டியது மாவட்ட நிர்வாகம்தான்.

    எனவே இந்த வி‌ஷயத்தில் கடுமையான நடவடிக்கை வேண்டும். தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதில் தீவிர நடவடிக்கை எடுங்கள். இதனை மீறி தனியார் யாராவது வழக்கு தொடர்ந்தால் அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.
    Next Story
    ×