search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்: திருநாவுக்கரசர் பேச்சு
    X

    காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்: திருநாவுக்கரசர் பேச்சு

    காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியில் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில், மோடி அரசின் பண மதிப்பு நீக்கத்தினை கண்டித்து காஞ்சீபுரம் காந்திரோடு, பெரியார் நினைவு தூண் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடை பெற்றது.

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுந்தர மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் ஆர்.வி.குப்பன், காஞ்சீ.ஜீவீ.மதியழகன், அளவூர் நாகராஜ் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் மிகவும் சிறப்பான ஆட்சியை தந்தவர் காமராஜர். புதிய அணை கட்டுகள், பாலங்கள், சர்க்கரை ஆலைகள் போன்றவை அவரது காலத்திலேயே அமைக்கப்பட்டன.

    புரட்சிகரமான மதிய உணவு திட்டத்தினை காமராஜர் கொண்டு வந்தார். உழைப்பால் உயர்ந்த அவர் மக்களுக்காக 8 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் இந்தி எதிர்ப்பு, பஞ்சம் முதலிய காரணங்களால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.

    50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில் நாட்டிற்காக உயிர் நீத்த தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரால் காங்கிரஸ் கட்சி இன்றும் எழுச்சியோடு உள்ளது. காங்கிரஸ் கட்சியினை சோனியா காந்தி, இளம் தலைவர் ராஜீவ் காந்தியும் சிறப்பாக வழிநடத்துகின்றனர்.

    தமிழகத்தில் 50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் வேறு கட்சியாக இருந்தால் காணாமல் போய் இருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சி எழுச்சியோடு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.

    வெளிநாட்டு வங்கிகளில் உள்ள 2 லட்சம் கோடி கருப்பு பணத்தை ஏழை மக்களின் வங்கி கணக்கில் டொபாசிட் செய்வேன் என வாக்களித்த மோடி இன்று எளிய மக்களின் பணத்திற்கு வேட்டு வைத்துள்ளார். பொருளாதார மேதை மன்மோகன் சிங் எழுப்பும் கேள்விகளுக்கு மோடி பதில் சொல்ல வில்லை.

    எம்.ஜி.ஆரை தான் உலகம் சுற்றும் வாலிபர் என சொல்வோம். ஆனால் மோடி இரண்டு ஆண்டுகளில் 65 நாடுகளுக்கு சென்றுள்ளார். மக்களை சந்திக்கும் தலைவராக ராகுல்காந்தி உள்ளார்.

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த போது ராகுல்காந்தி அவரை வந்து பார்த்தார். ஆனால் 72 நாட்களில் மோடி வரவில்லை. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம், புயல், வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய முறையில் வறட்சி நிவாரணம் தர மத்திய அரசு முன்வரவில்லை. இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.

    தற்போது மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதால் உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றிபெறும். சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பினை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

    ஜாதி கட்சிகள், சிறிய கட்சிகள், சினிமா நடிகர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தை ஆள்வோம் என கூறும் போது 150 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய காங்கிரஸ் கட்சிக்கும் அந்த ஆசை இருக்காதா? எனவே நாங்கள் காமராஜர் ஆட்சியினை அமைப்போம். எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் அண்ணாதுரை, இராம.நீராளன், பத்மநாபன், டி.சி.டி. சுகுமார், சங்கரலிங் கம், பச்சையப்ப நாயக்கர், வீரபத்திரன், பூபதிநாயுடு, சாலபோகம் அருண், முத்தியால்பேட்டை ராஜசேகர், அன்பு, நாதன், அருண், கணேஷ், சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×