search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான ராஜம் - தீ விபத்தில் வீடு எரிந்து கிடக்கும் காட்சி
    X
    பலியான ராஜம் - தீ விபத்தில் வீடு எரிந்து கிடக்கும் காட்சி

    டி.வி. வெடித்து தீ விபத்து: ஓய்வு பெற்ற பெண் அதிகாரி பலி

    நாகர்கோவிலில் சூறைக்காற்றால் மின் சப்ளை பாதிக்கப்பட்டதால் உயர் அழுத்த மின்சாரம் வீடுகளுக்குள் பாய்ந்தது. இதில் டி.வி. வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஓய்வு பெற்ற பெண் அதிகாரி பலியானார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று நாகர்கோவில் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்ததில் பல இடங்களில் மின் சப்ளை பாதிக்கப்பட்டது. நாகர்கோவில் பீச் ரோடு, பெரியவிளை, ராமன்புதூர், வடசேரி போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. மின்சாரம் இல்லாததால் இரவில் குழந்தைகளும், முதியவர்களும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 1.15 மணி அளவில் ராணித்தோட்டம் அனந்தன் நகர் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் திடீரென மின் பழுது ஏற்பட்டு உயர் அழுத்த மின்சாரம் வீடுகளுக்குள் பாய்ந்தது. இதில் பல வீடுகளில் டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வெடித்து சிதறின.

    இந்த விபத்தில் ராஜம் (77) என்ற பெண் பலியானார். இவர் மின் வாரியத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அனந்தன்நகர் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு தனியாக தூங்கிக் கொண்டு இருந்தார். அந்த சமயம் உயர் அழுத்த மின்சாரம் அவரது வீட்டில் பாய்ந்தது. இதனால் வீட்டில் இருந்த டி.வி. வெடித்து சிதறியது. இதில் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் பரவியது.

    ராஜம் வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி கல்யாண குமார், நிலைய அதிகாரி சத்யகுமார் ஆகியோர் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ராஜம் வீட்டில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    உடனே தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் இருந்த கட்டில், பிரிட்ஜ், புத்தகங்கள், துணிமணிகள் எரிந்து சிதறி கிடந்தன. அவற்றுக்கு நடுவே ராஜம் தீயில் கருகிய படி பிணமாக கிடந்தார்.

    தீ விபத்து ஏற்பட்ட சமயம் அதிகாலை என்பதால் ராஜம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அவர் அதில் இருந்து தப்பிக்க போராடியிருக்கிறார். முதுமை காரணமாக அவரால் வெளியே வரமுடியவில்லை. வீட்டுக்குள்ளே அவர் எரிந்து பிணமானது தெரியவந்தது.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராஜத்தின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராஜத்தின் கணவர் காளியப்பன். இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
    Next Story
    ×