search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் துணிகரம்: தொழில் அதிபரை காரில் கடத்திய கும்பல்
    X

    ஒட்டன்சத்திரத்தில் துணிகரம்: தொழில் அதிபரை காரில் கடத்திய கும்பல்

    ஒட்டன்சத்திரத்தில் நள்ளிரவில் தொழில் அதிபரை தாக்கி காரில் கடத்தி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது62). இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர், வணிக வளாகம் ஆகியவை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது 2 மகள்களும் காதல் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    இவருடைய மகன் அசோக்பாபு (21) மட்டும் அருணாச்சலத்துடன் வசித்து வருகிறார்.

    வெளியில் சென்றிருந்த அருணாச்சலம் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டின் அருகே ஒரு டாடாசுமோ கார் நின்று கொண்டிருந்தது. காருக்குள் டிரைவரும் காரின் வெளியே 3 வாலிபர்களும் நின்று கொண்டிருந்தனர்.

    அருணாச்சலம் மோட்டார் சைக்கிளை நிறுத்தியவுடன் 3 வாலிபர்களும் அருணாச்சலத்தை தாக்கி அவரை குண்டு கட்டாக தூக்கி காரில் போட்டனர்.

    இதில் நிலைகுலைந்து போன அருணாச்சலம் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் கார் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் இருந்த அருணாச்சலத்தின் மகன் அசோக்பாபுவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது தந்தையின் மோட்டார் பைக்கும் அவரது ஷுவும் கீழே கிடந்தது. உடனே இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பக்கத்து வீட்டில் இருந்த காமிராவில் காரில் கடத்திய கும்பல்களின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த கார் மூலச்சத்திரம் வழியாக கன்னிவாடி நோக்கி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    தொழில் போட்டி காரணமாக அருணாச்சலம் கடத்தப்பட்டாரா? அல்லது பணம் பறிக்கும் நோக்கத்தில் கும்பல் கடத்தி சென்று உள்ளனரா? பெண் தொடர்பில் தகராறு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்த போதிலும் தனது வீட்டு முன்பு காவலாளிகூட அருணாச்சலம் வைத்திருக்கவில்லை. பண வி‌ஷயத்தில் சிக்கனமாக இருந்ததால் இவரது உறவினர்களை கூட அருணாச்சலம் ஒதுக்கியே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அவரை கடத்தி சென்றார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×