search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளம் அருகே இளம்பெண் கொலை: காதலன் கைது
    X

    விளாத்திகுளம் அருகே இளம்பெண் கொலை: காதலன் கைது

    விளாத்திகுளம் அருகே இளம்பெண் கொலையான சம்பவம் குறித்து கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் நடுவக்குறிச்சி ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகள் முத்துமாரி (வயது 21). இவர் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 9-ந்தேதி விளாத்திகுளம் அருகே சூரங்குடி துணை மின் நிலையம் எதிரில் உள்ள காட்டு பகுதியில் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி விவேகானந்தர் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் ஐகோர்ட்டு மகராஜன் (23), முத்துமாரியை கொலை செய்தது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். கைதான ஐகோர்ட்டு மகராஜன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது சொந்த ஊர் தூத்துக்குடி சுந்தரவேல்புரம். நான் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறேன். முத்துமாரி வேலை செய்த நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் சுமை தூக்கும் வேலைக்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பல்வேறு ஊர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம்.

    இதற்கிடையே முத்துமாரியை செல்போனில் தொடர்பு கொள்ளும் போது, அவர் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார். இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, அவர் சரிவர பதில் கூறவில்லை. எனவே முத்துமாரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாம் என எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பிறகு எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நாங்கள் பிரிந்து விட்டோம்.

    கடந்த ஆண்டு (2016) ஜூன் மாதம் எனக்கு திருமணம் நடந்தது. நான் என்னுடைய மனைவி பிரியதர்ஷினியுடன் சந்தோ‌‌ஷமாக வாழ்ந்து வந்தேன். கடந்த 2-ந் தேதி முத்துமாரி எனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எனக்கு திருமணமாகி விட்டது. என்னை தொந்தரவு செய்யாதே என்று அவரிடம் கூறினேன். ஆனாலும் அவர், ‘என்னுடன் நீ சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளது. அதனைக் காண்பித்து ஆசைவார்த்தை கூறி கற்பழித்து ஏமாற்றியதாக உன் மீது போலீசில் புகார் செய்வேன்’ என்று கூறி அடிக்கடி மிரட்டினார்.

    கடந்த 8-ந் தேதி காலையில் முத்துமாரி, எனது வீட்டுக்கு வருவதாக கூறினார். நானும் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு என்னுடைய மனைவியிடம் தன்னுடைய தோழி என்று அறிமுகம் செய்தேன். பின்னர் மதியம் முத்துமாரி எங்கள் வீட்டில் சாப்பிட்டார். அப்போது அவருடைய நடவடிக்கையில் என்னுடைய மனைவி சந்தேகம் அடைந்தார். பின்னர் நான் என்னுடைய மனைவியிடம், முத்துமாரியை காதலித்து பிரிந்ததை கூறினேன்.

    பின்னர் முத்துமாரியை அவரது வீட்டில் சென்று விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றேன். திருமணத்திற்கு பின்பும் என்னை அடிக்கடி முத்துமாரி தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து கொண்டேன். நானும், முத்துமாரியும் தூத்துக்குடி- நெல்லை ரோட்டில் சென்றோம். பின்னர் முத்துமாரி, வேம்பாரில் உள்ள தோழியின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருப்போம் என்று கூறினார். எனவே கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றோம்.

    சூரங்குடி துணை மின் நிலையம் அருகில் சென்றபோது நான் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். பின்னர் அங்குள்ள காட்டுப்பகுதியில் வைத்து முத்துமாரியின் கழுத்து பகுதியில் குத்தினேன். இதில் முத்துமாரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    பின்னர் முத்துமாரி அணிந்து இருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பி சென்றேன். அவற்றை ரூ.22 ஆயிரத்துக்கு விற்று என்னுடைய கடன்களை அடைத்தேன். என்னுடைய மனைவிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போனை வாங்கி கொடுத்தேன். இதற்கிடையே போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர்.

    இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறினார்.

    ஐகோர்ட்டு மகராஜனை போலீசார் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×