search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு
    X

    புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு

    புதுவையில் மதுபானங்கள் மீதான கலால்வரியை 25 சதவீதம் கூடுதலாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அரசுக்கு பிரதான வருவாய் மதுபான விற்பனை மூலமே கிடைத்து வருகிறது.

    புதுவை மாநிலத்தில் மதுபானங்களுக்கு விற்பனை வரிக்கு பதிலாக கலால்வரியே விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மதுபானங்கள் மீதான கலால்வரியை 25 சதவீதம் கூடுதலாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானம், வெளிநாட்டு உற்பத்தி மதுபானங்கள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகள் அடங்கும். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கலால்வரி உயர்த்தப்பட்டதற்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுவையில் மதுபானம் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதால் மது அருந்த தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மதுபான பிரியர்கள் வருவார்கள். இதனால் மதுபான வகைகள் விலை பிற மாநிலங்களை விட குறைவாக இருக்கும் வகையிலேயே புதுவையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    பல்வேறு பிரிவுகளில் மதுபானம் பல்க் லிட்டர் ரூ. 8-ல் இருந்து ரூ. 45 ஆக உயர்ந்துள்ளது. ரூ.399 மதிப்புள்ள மதுபான பெட்டி (கேஸ்) ஒரு பல்க் லிட்டர் அளவுக்கு ரூ. 30-ல் இருந்து ரூ. 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போல் ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்படும் மதுபான பெட்டி (கேஸ்) ஒரு பல்க் லிட்டர் அளவுக்கு ரூ.181-ல் இருந்து ரூ. 226 ஆக உயர்ந்துள்ளது. இடைப்பட்ட வகையில் உள்ள 11 பிரிவுகளுக்கு ரூ.10-ல் இருந்து ஒரு பல்க் லிட்டருக்கு ரூ.31 ஆக உயர்ந்துள்ளது.

    பீரை பொறுத்த மட்டில் ரூ.400-க்கு விற்கப்படும் வகைகள் நீக்கப்பட்டு, ரூ.499-க்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பல்க் லிட்டருக்கு ரூ. 24 வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    ரூ.500 முதல் ரூ. 799 வரையிலான பீர் பெட்டிகளுக்கு ஒரு பல்க் லிட்டருக்கு ரூ. 26-ம், ரூ. 800 முதல் ரூ.999 வரையிலான பீர் பெட்டிகளுக்கு ரூ.28-ம், ரூ.1000-க்கு மேல் உள்ள பீர் பெட்டிகளுக்கு ரூ.30-ம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகளின் விலை உயர்வு இறுதியாக கடந்த 2012-ம் ஆண்டுதான் உயர்த்தப்பட்டது.

    இந்த கூடுதல் கலால் வரி உயர்வின் மூலம் ரூ.15 கோடி வருவாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.700 கோடி கலால் வருவாயை திரட்ட அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இதுவரை ரூ.533 கோடி மட்டுமே கடந்த ஜனவரி மாதம் வரை கிட்டியுள்ளது.
    Next Story
    ×