search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் வரவில்லையென்றால் கீழே குதிப்பேன்: செல்போன் டவரில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்
    X

    அமைச்சர் வரவில்லையென்றால் கீழே குதிப்பேன்: செல்போன் டவரில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்

    கரூர் மாவட்டத்தில் லாரி டிரைவர் ஒருவர் தன்னை பார்க்க ‘அமைச்சர் வரவில்லையென்றால் கீழே குதிப்பேன்’ என்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கரூர்:

    கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48). லாரி டிரைவரான இவர் நேற்றிரவு தன் வீட்டிற்கு எதிரில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார்.

    இது பற்றி தகவல் அறிந்த டி.எஸ்.பி. கும்மராஜா, பசுபதி பாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அன்பழகன் தன்னை பார்க்க கரூர் எம்.எல்.ஏ.வும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் இங்கு உடனே வரவேண்டும். அவரிடம் தான் நான் கோரிக்கை குறித்து பேசுவேன். வேறு யாரிடமும் பேசமாட்டேன். கலெக்டரே வந்தாலும் கீழே இறங்க மாட்டேன். என்னை கீழே இறக்க முயற்சித்தால் மேலிருந்து குதித்து விடுவேன் என்றும் எச்சரித்தார்.

    அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இதுகுறித்து போலீசார் தகவல் தெரிவிக்க, அன்பழகன் செல்நம்பரை பெற்று அவருடன் தொடர்பு கொள்ள அமைச்சர் முயற்சித்தார். ஆனால் அன்பழகன் பேசவில்லை. தனக்கு போனே வரவில்லை என்றும் கூறினார்.

    இந்த நிலையில் டவரின் நடுப்பகுதி வரை அன்பழகனுக்கு தெரியாமல் ஏறிய தீயணைப்பு படை வீரர்கள் 2 பேரை பார்த்த அன்பழகன், அவர்கள் இறங்கவில்லையெனில் குதிப்பேன் என்று கூறி டவர் பக்கவாட்டு கம்பியை பிடித்து கொண்டு தொங்கினார்.

    உடனே தீயணைப்பு வீரர்கள் கீழே இறங்கினர். தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து அன்பழகன் நள்ளிரவு ஒரு மணியளவில் கீழே இறங்கினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×