search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி.எம்.சி.சிவக்குமார் கொலை: கூலிப்படையினருக்கு பணம் கொடுத்த வாலிபர் கைது
    X

    வி.எம்.சி.சிவக்குமார் கொலை: கூலிப்படையினருக்கு பணம் கொடுத்த வாலிபர் கைது

    முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கொலையில் கூலிப்படையினருக்கு பணம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார், கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி கூலிப்படையினரால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    சாராய வியாபாரி ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி, தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக கூலிப் படையினரை ஏவி வி.எம்.சி.சிவக்குமாரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    இந்த படுகொலை தொடர்பாக எழிலரசி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் காரைக்கால் திருப்பட்டினம் அபிராமி அம்மன் கீழ வீதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(23) என்பவர் கூலிப்படையினருக்கு பணம் பரிமாற்றம் செய்ததாகவும், அவர்களுக்கு போலியான அடையாள ஆவணங்களை கொடுத்து சிம்கார்டுகளை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்தது.

    மேலும், வி.எம்.சி.சிவக் குமார் படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு அவர் சிங்கப்பூருக்கு சென்று விட்டதும் தெரியவந்தது.

    எனவே போலீசார் அவரிடம் விசாரணை செய்வதற்காக அவரது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி அவரை ஊருக்கு வரவழைத்தனர்.

    இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய சுந்தரமூர்த்தியை தமிழக போலீசாரின் உதவியுடன் நிரவி போலீசார், கைது செய்தனர்.

    காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பிரபு முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி பிரபு உத்தரவிட்டார்.

    மேலும் வி.எம்.சி.சிவக்குமார் கொலையில் தேடப்பட்ட இளவரசன், கண்ணன் ஆகியோரை திருச்சியில் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×