search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையம் அருகே வனத்துறை வைத்திருந்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது
    X

    கடையம் அருகே வனத்துறை வைத்திருந்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது

    கடையம் அருகே வனத்துறை வைத்திருந்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. இதுபோன்று தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    கடையம்:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள செங்கோட்டை, கடையம், களக்காடு பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடையம் அருகே கோவிந்தபேரி, சம்மங்குளம், அழகப்பபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு ஆகிய ஊர்கள் உள்ளன.

    இங்கு மலையடிவாரத்தில் உள்ள வயல்கள் மற்றும் தோட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. மலைப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவிற்காக சிறுத்தை, புலி, கரடி போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைகின்றன.

    கோவிந்தபேரி, அழகப்பபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் நாய்களை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது. இதையடுத்து அழகப்பபுரம் பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

    அந்த கூண்டில் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதன் பின்னரும் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் காவலுக்கு இருக்கும் நாய்களை சிறுத்தை கொன்று தின்பது வழக்கமாக நடந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் பெத்தான்பிள்ளை குடியிருப்பில் உள்ள அருளப்பன், முருகன் ஆகியோரது வீட்டு முன்பு இரவில் படுத்திருந்த நாய்களை சிறுத்தை அடித்துக் கொன்றது. மேலும் ஒரு ஆட்டையும் கொன்று தின்றது. இதையடுத்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

    அந்த கூண்டில் டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் சிக்கின. ஒரே மாதத்தில் 2 சிறுத்தைகள் சிக்கிய சம்பவம் பெத்தான்பிள்ளை குடியிருப்பு பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. அவர்கள் வெளியில் நடமாடவே அஞ்சினர்.

    அப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் அங்கு சிறுத்தைக்கு கூண்டு வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு பெத்தான்பிள்ளை குடியிருப்பில் இசக்கி என்பவரது ஆட்டுப்பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை அங்கு ஒரு ஆட்டை கடித்துக் குதறியது. அப்போது ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு இசக்கி வெளியில் வந்தார். ஆள்அரவம் கேட்டதும் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது. கழுத்தில் காயத்துடன் அந்த ஆடு உயிர்தப்பியது.

    அதன் பின்னர் இன்று அதிகாலையில் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது. இது குறித்து தகவல் அறிந்த முண்டன்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் ஜெயராஜ், கடையம் வனச்சரகர் இளங்கோ மற்றும் கால்நடை மருத்துவர் அங்கு சென்றனர். கூண்டில் சிக்கிய சிறுத்தையை பிடித்து காரையாறு வனப்பகுதியில் கொண்டு விட அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கடந்த ஆகஸ்ட்மாதம் அழகப்பபுரத்தில் ஒரு சிறுத்தையும், பெத்தான்பிள்ளை குடியிருப்பில் டிசம்பர் மாதம் அடுத்தடுத்து 2 சிறுத்தைகளும் கூண்டில் சிக்கின. அதே பகுதியில் தற்போது 4-வது சிறுத்தை சிக்கியுள்ளது.

    நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. அதிலும் சிறுத்தைகள் கடந்த ஆண்டை விட பலமடங்கு அதிகரித்து உள்ளன. இதனால் போதிய உணவு கிடைக்காமல் அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருகின்றன.

    செங்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயியை சிறுத்தை அடித்துக் கொன்றது. அடிக்கடி தொடரும் இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அதிகரித்துள்ள சிறுத்தைகள் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×