search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெலமங்கலம் அருகே மோசமான வானிலை காரணமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை படத்தில் காணலாம்.
    X
    கெலமங்கலம் அருகே மோசமான வானிலை காரணமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை படத்தில் காணலாம்.

    ஓசூர் அருகே மோசமான வானிலையால் காட்டுப்பகுதியில் இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

    ஓசூர் அருகே மோசமான வானிலையால் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. சாமர்த்தியமாக செயல்பட்டதால் விமானி உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
    ராயக்கோட்டை:

    கர்நாடக மாநிலம் கனகபுராவில் ரவிசங்கர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கனகபுராவில் இருந்து ஆக்ஸ்போர்டு நிறுவனத்திற்கு சொந்தமான பெல் - 407 என்ற ஹெலிகாப்டரில் கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு சென்றார். அங்கு ரவிசங்கரை இறங்கி விட்ட பிறகு ஹெலிகாப்டர் நெய்வேலியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது.

    நேற்று முன்தினம் இரவு அந்த ஹெலிகாப்டர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் பக்கமாக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் மழை மற்றும் கடும் பனி காணப்பட்டது. மோசமான வானிலை காணமாக ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அந்த ஹெலிகாப்டர் உடனடியாக கெலமங்கலம் அருகே முகலூர் பக்கமுள்ள காட்டுப்பகுதியில் தரையிறக்கப்பட்டது.

    அந்த நேரம் ஹெலிகாப்டரில் விமானியான ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஆர்.பி.டாலி, பொறியாளர் வினய் கபீர் ஆகியோர் இருந்தனர்.

    சாமர்த்தியமாக செயல்பட்டதால் விமானி மற்றும் பொறியாளர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் அந்த இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலையும் ஓசூர் சுற்று வட்டார பகுதியில் கடுமையான பனி நிலவியது. இதனால் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பெங்களூருவில் இருந்து எரிபொருள் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டரில் எரிபொருள் நிரப்பப்பட்டது. காலை 10 மணி அளவில் வானிலை சரியானதை தொடர்ந்து முகலூரில் இருந்து ஹெலிகாப்டர் கர்நாடக மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது.

    ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்ட தகவல் அறிந்து முகலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×