search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    X

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகமானது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 127 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் குறைந்ததையடுத்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 9-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1700 கன அடிவரை திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் கடந்த 19-ந்தேதி தமிழக எல்லையான ‘ஜீரோ’ பாயிண்டிற்கு வந்தடைந்தது. 21-ந்தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் சென்றடைந்தது.

    கிருஷ்ணா கால்வாய் ஓரத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட மதகுகளை ஆந்திர விவசாயிகள் திறந்து தங்களது விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியதால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் குறைந்தது. வெறும் 5 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது.

    இதை தொடர்ந்து திறந்த மதகுகளை மூட ஆந்திர அதிகாரிகளிடம் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆந்திர அதிகாரிகள் திறக்கப்பட்ட மதகுகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகமானது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 127 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கிருஷ்ணா கால்வாயில் திறக்கப்பட்ட கால்வாய்கள் முழுமையாக மூடப்படவில்லை. பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி 22.84 அடி நீர்மட்டம் பதிவானது. (மொத்த உயரம் 35 அடி) 558 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து சென்னை மெட்ரோ போர்டுக்கு 32 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    Next Story
    ×