search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் கொட்டும் மழையிலும் விடிய, விடிய போராட்டம்
    X

    புதுவையில் கொட்டும் மழையிலும் விடிய, விடிய போராட்டம்

    புதுவையில் கொட்டும் மழையிலும் மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையிலும் போராட்டம் நீடித்து வருகிறது.
    புதுச்சேரி:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் மாணவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். ரோடியர் மில் திடலில் ஒன்று திரண்டு அவர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். நேற்று போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தது.

    இந்த போராட்டத்தி பல்வேறு சமூக அமைப்பினர், வியாபாரிகள் நல சங்கத்தினர், குடியிருப்பினர் நல சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினரும் மேள- தாளங்களுடன் ஊர்வலமாக வந்து பங்கேற்றனர்.

    நேற்று பந்த் போராட்டம் அறிவிப்பால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

    அதுபோல் கிராமப்புற கல்லூரி மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் திரண்டு வந்திருந்தனர். இதனால் புதுவை-கடலூர் சாலையே ஸ்தம்பித்து போனது. எனினும் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அமைதியான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிலையில் இரவு 9.15 மணியளவில் திடீரென மழை பெய்தது.

    ஆனால், மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் கொட்டும் மழையிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய, விடிய போராட்டம் நடந்தது.

    இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது. தற்போது இரவு பெய்த மழையால் ரோடியர் மில் திடல் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு குழுவினர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் மாணவர்கள் போராட்டம் நடத்த ஏதுவாக தன்னார்வலர்கள் சிலர் மைதானத்தில் தண்ணீர் தேங்காத இடத்தில் பந்தல் அமைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×