search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் 4-வது நாளாக அணி அணியாக திரண்ட மாணவர்கள், இளைஞர்கள்- பெண்கள்
    X

    சேலத்தில் 4-வது நாளாக அணி அணியாக திரண்ட மாணவர்கள், இளைஞர்கள்- பெண்கள்

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கேட்டு சேலத்தில் 4-வது நாளாக இன்றும் மாணவ-மாணவிகள் இளைஞர்கள், பெண்கள் உற்சாகமாக திரண்டிருந்தனர்.
    சேலம்:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    இதில் பெண்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என பொதுமக்கள் பலரும் காளை மாடுகள், குதிரைகள், சேவல்களுடன் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் இடையே இளைஞர்கள் சிலம்பாட்டம் உள்பட பாரம்பரிய கலைகளை நிகழ்த்தி அனைவரையும் வியக்க வைத்தனர். போராட்டம் நடந்த பகுதிக்கு பலர் தங்களது குடும்பத்துடன் வந்து ஆதரவு தெரிவித்து விட்டு சென்றதையும் பார்க்க முடிந்தது.

    தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகள் இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள், தொழிலாளிகள், வக்கீல்கள், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதனால் நேற்றைய போராட்ட களத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கலெக்டர் அலுவலக பகுதியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தது.

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக இன்றும் மாணவ-மாணவிகள் இளைஞர்கள், பெண்கள் உற்சாகமாக திரண்டிருந்தனர்.

    அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை ஒழிக்க வேண்டியும் ஆவேசமாக கோ‌ஷம் எழுப்பியது விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது.

    போராட்டக்காரர்கள் அமர வசதியாக நாட்டாண்மை கட்டிடம் முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பந்தலில் அமர்ந்து இருப்பவர்களும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து கண்டன கோ‌ஷங்களை எழுப்பி வருகிறார்கள்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்க இன்றும் அணி, அணியாக ஆண்கள், பெண்கள், குடும்பத்தோடு தாரை, தப்பட்டை முழங்க வந்து பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை தமிழர்கள் வாங்கி பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி குளிர்பான பாட்டில்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

    பெரியார் மேம்பாலம் உள்பட கலெக்டர் அலுவலக சுற்றுப்புற சாலைகளில் 4-வது நாளாக இன்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையொட்டி கலெக்டர் அலுவலக பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
    Next Story
    ×