search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் 3-வது நாளாக தொடரும் எழுச்சி போராட்டம்
    X

    திருச்சியில் 3-வது நாளாக தொடரும் எழுச்சி போராட்டம்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இரவு, பகல் பாராமல் மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் திருச்சியில் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது.
    திருச்சி:

    தமிழகத்தின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் அடையாளமாக திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி மிகப்பெரிய போராட்டமாக வெடித்துள்ளது.

    திருச்சியில் நேற்று முன் தினம் சமயபுரம் டோல்கேட், சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட மாணவர்கள், இளைஞர்கள் திருச்சி கோர்ட்டு அருகே உள்ள எம். ஜி.ஆர். சிலை முன்பு குவிந்தனர்.

    அவர்கள் இரவில் கலைந்து சென்று விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் போராட்டம் இரவிலும் நீடித்தது. பகலில் கடும் வெயில், இரவில் எலும்பை உருக்கும் குளிர் என்று எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் போராட்டத்தை கால இடைவெளியின்றி தொடர்ந்தனர்.

    சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிக்கும் முடிவின் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் பிரதமர் மோடி கைவிரித்த நிலையில் மாணவர்கள் போராட்டம் இன்னும் வேகமெடுத்தது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களோடு நேற்று முதல் பொதுமக்களும் தங்களை இணைத் துக்கொண்டனர். பலர் தங்கள் குடும்பத்தோடு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

    தலைமையே இல்லாமல் நடக்கும் இந்த தன்னெழுச்சி போராட்டம் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை திணற வைத்துள்ளது. வர்த்தகர்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் போராட்ட களத்திற்கு வந்து தங்களது ஆதரவினை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தன்னலமற்ற வகையில் நடைபெறும் இந்த அறவழி போராட்டம் இரவிலும் தொடர்ந்தது.

    அரசு ஊழியர்கள் தங்கள் ஆதரவினை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு தங்களால் முடிந்த அளவில் உணவு, தண்ணீர் வசதியை செய்து கொடுத்து வருகின்றனர்.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் காலையில் பணிக்கு சென்று விட்டு மாலையில் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள். பள்ளி மாணவர்களும் நேற்று முதல் களமிறங்கி உள்ளனர். வாடிவாசல் திறக்காமல் தாங்கள் வீடு வாசல் செல்வதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் இருந்து வருகிறார்கள்.

    திருச்சியில் இரவு, பகல் பாராமல் நடைபெறும் இந்த தொடர் போராட்டம் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது. தமிழர்களிள் பெருமைக்குரிய ஜல்லிக்கட்டு என்னும் அடையாளத்தை எந்த காரணத்தை கொண்டும், எந்த சமரசத்தின் மூலமாகவும் அழிக்க விடமாட்டோம் என்று களத்தில் அமர்ந்திருக்கும் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் எழுச்சியுடன் கூறி வருகிறார்கள்.

    இப்படி ஒரு எழுச்சியை இதுவரை இந்த தமிழகம் கண்டதில்லை என்று கூறு மளவிற்கு மாணவர்கள் போராட்டம் வரலாறு படைத்துள்ளது. நாளுக்கு நாள் பெருகி வரும் ஆதரவால் நிச்சயம் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்பது போராட்ட களத்தில் கூடியுள்ள ஒட்டு மொத்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதேபோல் திருச்சி மாவட் டம் மணப்பாறை, லால் குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், தொட்டியம், திருவெறும்பூர், துவாக்குடி ஆகிய ஊர்களிலும், பட்டி தொட்டிகளிலும் இளைஞர்களுடன் சேர்ந்து பொது மக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    கடந்த மூன்று நாட்களாக போராட்டம் தொடர்ந்த போதிலும் இளைஞர்கள் முகத்திலும், உடலிலும் சற்றும் சோர்வின்றி புத்துணர்வுடன் காணப்படுகிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் அவர்களுக்கு அளித்து வரும் ஆதரவு மாணவர்களின் போராட்ட குணத்தை தூண்டியுள்ளது. போராட்டத்தில் இருந்து சிறிதும் பின்வாங்கும் எண்ணம் இல்லை என்பது அவர்களின் எழுச்சி கோ‌ஷங்களில் இருந்து தெரியவருகிறது.
    Next Story
    ×