search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு
    X

    காஞ்சீபுரத்தில் மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு

    காஞ்சீபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் வணிகர் வீதியில் நேற்று முன்தினம் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் அங்கேயே முகாமிட்டு உள்ளனர்.

    நேற்று இரவு கடும் பனியிலும் குளிரை பொருட்படுத்தாமல் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இரவிலும் கோ‌ஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், லட்சுமிபதி, அண்ணாத்துரை, முத்துராம லிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    செங்கல்பட்டு ராட்டின கிணறு மேம்பாலம் அருகே சடடக் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே அரிமா சங்கம், வணிகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நேற்று மாலை துவங்கிய ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக வலைதள குழுவைச் சேர்ந்த நண்பர்கள், பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நிலத்தரகர் சங்க நிர்வாகிகள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர்.

    ஆர்ப்பாட்ட இடத்திலேயே தங்களது இரவு உணவை சாப்பிட்ட அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து நல்ல முடிவு வரும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    நேற்று இரவு வரை மாணவர்கள் போராட்டத்தில் டி.வி. சீரியல் நடிகை மகாலட்சுமி கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இன்று காலையும் அவர் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மாணவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் இன்று முதல் உண்ணா விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    இதற்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். காலை முதல் ஏராளமானோர் போராட்டம் நடத்தும் இடத்தில் குவிந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    தனியார் நிறுவன ஊழியர்களும் இதில் பங்கேற்றனர். வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×