search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளுவர் சிலை அருகே இரவிலும் போராட்டத்தை தொடர்ந்த இளைஞர்களை படத்தில் காணலாம்
    X
    திருவள்ளுவர் சிலை அருகே இரவிலும் போராட்டத்தை தொடர்ந்த இளைஞர்களை படத்தில் காணலாம்

    வேலூர்-திருவண்ணாமலையில் கொட்டும் பனியிலும் மாணவர்கள் விடிய விடிய போராட்டம்

    வேலூர், திருவண்ணாமலையில் கொட்டும் பனியிலும் விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நீடித்தது. இன்று காலையிலும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.
    வேலூர்:

    ஜல்லிக்கட்டு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. வேலூர் பழைய பஸ்நிலையத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாலைவரையில் மாணவர்கள் கலைந்துசெல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்க வலியுறுத்தியும் கோ‌ஷமிட்டனர்.

    மாலையில் மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதேபோன்று மாணவர்களும் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். ஆனாலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இரவிலும் விடிய விடிய போராட்டத்தை கைவிடாமல் கொட்டும் பனியிலும் பழைய பஸ் நிலையத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், ராமச்சந்திரன், ரஜினிகாந்த், சீதாராமன் உள்பட போலீசாரும் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இரவு பனி கொட்டியது. இதனை பொருட்படுத்தாது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மார்க்கெட்டுக்கு பார்சல் வந்த சரக்கு பைகளை மாணவர்கள் விரித்து அதில் படுத்து தூங்கினர். கொசுக்கடி மற்றும் பனியால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    விடிய விடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையிலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

    மாணவர்கள் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு பெருகி வருகிறது. சமூக, தமிழ் ஆர்வலர்கள் மாணவர்களுக்கு உணவு, குடிநீர், சப்ளை செய்தனர்.

    வேலூர் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது கூலி பணத்தில் மாணவர்களுக்கு டீ, காபி, சப்ளை செய்தனர்.

    மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இன்று காலை மாணவர்கள் போராட்டம் நடைபெறும் இடத்தை சுத்தம் செய்து கொடுத்தனர். இன்று காலை முதல் மாணவர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    அரசியல் பிரமுகர்கள் சிலர் மாணவர்களை சந்தித்து உதவி வேண்டுமா எனக் கேட்டனர். அதனை மாணவர்கள் ஏற்க மறுத்தனர்.

    தமிழ் உணர்வுடன் தான் உதவி செய்ய வந்தோம். மாணவர்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என அவர்கள் கூறி சென்றனர். போராட்டம் நடைபெறும் இடத்தில் 108 ஆம்புலன்சு நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் போராட்டம் காரணமாக சென்னையில் 31 கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரி முன்பு மாணவர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் போராட்டம் நடந்து வருகிறது.

    வாணியம்பாடியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் அருகே மாணவர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றும் அவர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். குடியாத்தம், ஆம்பூர், அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாலாஜா விலும் மாணவர்களும் இளைஞர்களும் திரண்டு இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இரவிலும் கலைந்து செல்லாமல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையில் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

    திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பீட்டாவை தடை செய்ய கோரியும், ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்க கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    ஆரணி கோட்டை மைதானத்தில் நேற்று காலை மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். அவர்களது போராட்டம் விடிய விடிய நடந்தது. இன்று காலையும் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    செங்கம், வந்தவாசி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர், போளூரிலும் மாணவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×