search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்கோடு நிதி நிறுவன அதிபர் சிவராஜை, போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுத்தபடம்.
    X
    பாலக்கோடு நிதி நிறுவன அதிபர் சிவராஜை, போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுத்தபடம்.

    பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நிதிநிறுவன அதிபருக்கு 4 ஆயுள் தண்டனை

    வட்டிக்கு கடன் கொடுத்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாலக்கோடு சிவராஜிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 44). இவர் தனது வீட்டின் அருகில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் கந்து வட்டிக்கு பணத்தை கடனாக வாங்கிய பெண்களில் பலரை மிரட்டி பாலக்கோடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார். இவ்வாறு பெண்களை மிரட்டி உல்லாசமாக இருக்கும் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்தார். கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவருடைய செல்போன் பழுதானது. அந்த செல்போனை பாலக்கோடு பஸ் நிலையம் அருகே செல்போன் பழுதுபார்க்கும் கடையில் பழுது பார்க்க கொடுத்தார்.

    அப்போது அதில் இருந்த மெமரி கார்டில் சிவராஜ் 27 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்போன் கடை ஊழியர் முன்னா(37) அந்த வீடியோ காட்சிகளை தனது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்தார். பின்னர் இதுகுறித்து சிவராஜிடம் தெரிவித்த அவர், உல்லாச காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு பேரம் பேசினார். இதுதொடர்பாக இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முன்னா, உல்லாச வீடியோ காட்சிகளை தனது நண்பர்களுக்கு அனுப்பினார். சில வீடியோ காட்சிகளை இணையதளத்திலும் பரவ விட்டார்.

    நிதி நிறுவன அதிபர் சிவராஜின் உல்லாச வீடியோ காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதளம் மூலமாக வேகமாக பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சிவராஜால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பெண்கள் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவராஜ் மற்றும் முன்னா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த சிவராஜின் பாலியல் லீலைகளால் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிவராஜை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். சிவராஜால் பாதிக்கப்பட்டவர்களில் புகார் அளித்த 4 பெண்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சி அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சிவராஜ் மற்றும் முன்னா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து பாலியல் பலாத்கார குற்றத்திற்காக சிவராஜிக்கு 4 ஆயுள்தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66(பி)ன் கீழ் 8 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும், 67(ஏ) பிரிவின்படி 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். சிவராஜிக்கு மொத்தமாக ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் சிவராஜின் செல்போனில் இருந்த உல்லாச வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்ட குற்றம் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக முன்னாவிற்கு 3 பிரிவுகளின் கீழ் 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.61 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன்மூலம் சிவராஜ் ஒரு ஆயுள் தண்டனை காலத்திற்கு சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து சிவராஜை, போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
    Next Story
    ×