search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் 20-ந்தேதி முழு அடைப்பு
    X

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் 20-ந்தேதி முழு அடைப்பு

    ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் வரும் 20-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்காக பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு போராளி குழு என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்த குழுவில் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் தேசிய இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, லோக் ஜனசக்தி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த போராளிகள் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு போராளிகள் குழு தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செல்வமுத்துராயன் முன்னிலை வகித்தார்.

    குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், மாறன், புரட்சி வேந்தன், நாராயணசாமி, அழகர், அறிவுமணி, ஜெயின், பால பாஸ்கர், செல்வராஜ், அரவிந்த், ராஜேஷ், கவுதம், தாமு, அந்துவான், சதீஷ், பாஸ்கரன், கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கூட்டம் முடிந்ததும் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இந்த தடை உத்தரவை கண்டித்து தாமாகவே தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அதே போல் புதுவையிலும் தற்போது போராட்டம் தொடங்கி உள்ளது.

    எங்கள் போராட்ட குழு சார்பில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுவையில் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்த உள்ளோம்.

    அதோடு அன்றைய தினம் 7 மையங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×