search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணும் பொங்கல் - பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    X

    காணும் பொங்கல் - பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    காணும் பொங்கல் விழாவையொட்டி சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடல் பகுதியில் குவிந்தனர்.
    பொன்னேரி:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடல் பகுதியில் குவிந்தனர்.

    காலை முதலே ஏராளமானோர் குடும்பத்துடன் வரத் தொடங்கினர். இதனால் பழவேற்காடு பகுதி களைகட்டியது. அவர்கள் அங்குள்ள சமஸ்வரர் ஆலயம், ஆதி நாராயணன் பெருமாள் கோவில், மகிமை மாதா கோவில் ஆகியவற்றுக்கு சென்று வழிபட்டனர்.

    சின்ன மசூதியில் உள்ள 800 ஆண்டு பழமை வாய்ந்த நிழல் கடிகாரத்தை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    கலங்கரை விளக்கம், டச்சு கல்லறையை பார்வையிட்டு சிறப்புகளை தெரிந்து கொண்டனர்.

    பழவேற்காடு கடலில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டதால் படகுகளில் சென்று பறவைகள் சரணாலயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    சுற்றுலா பயணிகள் மரநிழல்களில் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி டி.எஸ்.பி. துரைராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பெண்களை கேலி செய்வதை தடுக்க மாறு வேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி கடலில் குளிப்பவர்களை தடுக்கவும், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கவும் நீச்சல் தெரிந்த மீனவர்கள் தயார் நிலையில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    வார்தா புயல் காரணமாக இந்த ஆண்டு வண்டலூர் பூங்கா மூடப்பட்டதால் பழவேற்காட்டில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் பூண்டி ஏரியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏரிக்கு செல்லும் நுழைவு வாயிலில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து பரிசோதித்த பின்னரே வாகனங்களை அனுமதித்தனர்.
    Next Story
    ×