search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் அருகே பள்ளிக்கூடம் சென்று திரும்பிய மாணவர்களை தாக்க முயன்ற சிறுத்தை
    X

    சத்தியமங்கலம் அருகே பள்ளிக்கூடம் சென்று திரும்பிய மாணவர்களை தாக்க முயன்ற சிறுத்தை

    சத்தியமங்கலம் அருகே பள்ளிக்கூடம் சென்று திரும்பிய மாணவர்களை சிறுத்தை தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த ராஜன்நகர் ஊராட்சிக்குட்பட்ட போக்கனாங்கரை கிராமத்தில் கடந்த டிசம்பர் 20-ம் தேதி புகுந்த சிறுத்தை அங்குள்ள சிங்காரி, நந்தா தோட்டம் ஆறுமுகம், அமராவதி ஆகியோரின் தோட்டத்தில் இருந்த ஆடுகளை கடித்துக் கொன்றது.

    தொடர்ந்து ஆடுகளை தாக்கியதால், சிறுத்தை நடமாடும் வழித்தடத்தில் 10 இடங்களில் தானியங்கி கேமார வைத்து வனத்துறையினர் காத்திருந்தனர். மேலும், ஆடுகள் தாக்கப்பட்ட இடத்தில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் வனத்துறையினர் வைத்த பொறியில் சிக்காமல் பல்வேறு கிராமங்களில் சிறுத்தை உலாவியது. தெடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. கடந்த 23 நாள்களாக சிறுத்தை அச்சுறுத்தலால் கிராமமக்கள் விவசாயப் பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை உப்புப்பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 15 பேர் அங்குள்ள பள்ளிவேலை முடிந்து பாரதி நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டேவிட் என்ற மாணவர், மாரியம்மன் கோவில் பள்ளத்தில் கீழே கிடந்த பொருளை எடுக்க முயன்றபோது மூங்கில் புதரில் இருந்த சிறுத்தை உறுமியது. அவர்களை தாக்க முயன்றபோது மாணவர்கள் அபாயக் குரல் எழுப்பினர்.

    அதனைக் கேட்ட பக்கத்துத்தோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோடாலி, தடி, அரிவாள் ஆகியவற்றுடன் சம்பவயிடத்துக்கு சென்று சிறுத்தையை விரட்டினர்.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் விலங்கின் கால்தடயத்தை வைத்து சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் துப்பாக்கி ஏந்திய ஊழியர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூர்த்தி என்பவரின் தோட்டத்தில் இருந்த காவல்நாயை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. அதே இடத்தில் மீண்டும் சிறுத்தை வரும் என்ற எதிர்ப்பார்பில் அங்கு சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    சிறுத்தை நடமாட்டத்தில் கிராமமக்கள் ஊரின் முகப்பு பகுதியில் தீமூட்டியும் பட்டாசு வெடித்தும் தடி, அரிவாளுடன் காவல் காத்து வருகின்றனர். கிராமமக்கள் உதவியுடன் வனத்துறையினர் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×