search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலையான தூத்துக்குடி மீனவர்கள் கலெக்டரை சந்தித்து நன்றி கூறியபோது எடுத்த படம்
    X
    விடுதலையான தூத்துக்குடி மீனவர்கள் கலெக்டரை சந்தித்து நன்றி கூறியபோது எடுத்த படம்

    இலங்கை சிறையில் விடுதலையான தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் கலெக்டருடன் சந்திப்பு

    இலங்கை சிறையில் விடுதலையான தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் கலெக்டரை சந்திப்பு நன்றி கூறி தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 16-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த விக்டர் அமலன், லியோ, வெற்றிவேல், அஜித்குமார், வினோத்குமார், பிரவின் ஆகியோருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

    நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென அவர்களது படகு பழுதானது. இதனால் அவர்கள் நடுக்கடலில் தவித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை மீறி மீன் பிடிப்பதாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி கலெக்டர் ரவிகுமாரை சந்தித்து இலங்கை மீனவர்களால் பிடித்து செல்லப்பட்ட 7 மீனவர்களையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் 51 பேர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் நேற்று காரைக்காலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    பின்னர் தூத்துக்குடி மீனவர்கள் 7 பேரும் இன்று அதிகாலை 2 மணி அளவில் தூத்துக்குடிக்கு வந்தனர். உடனே அவர்கள் மாவட்ட கலெக்டர் ரவிகுமாரை சந்தித்தனர். அப்போது அவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    Next Story
    ×