search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திங்கட்கிழமை வரும்
    X

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திங்கட்கிழமை வரும்

    கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வருகிற 16-ந் தேதி வந்து சேர வாய்ப்பு உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    4 ஏரிகளையும் சேர்த்து 1.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனை வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை 1 மாதத்துக்கு மட்டும் பூர்த்தி செய்ய முடியும்.

    பருவமழையும் பொய்த்து போனதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    அதன்படி கடந்த நவம்பர் 21-ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் டிசம்பர் மாதம் 11-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    அதன் பின்னர் தண்ணீர் திறப்பு குறித்து ஆந்திர அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கண்டேலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினார்.

    இதைத்தொடர்ந்து நேற்று மதியம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

    இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) வந்து சேர வாய்ப்பு உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் நீர் மட்டம் 23.03 அடியாக பதிவானது. 582 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியிலிருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாயில் 30 கனஅடி விதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×