search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரை தேடி குவிந்த நாரை மற்றும் நீர்காகங்களை படத்தில் காணலாம்
    X
    இரை தேடி குவிந்த நாரை மற்றும் நீர்காகங்களை படத்தில் காணலாம்

    மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால் இரை தேடி குவியும் பறவைகள்

    மேட்டூர் அணையில் நீர்மட்டம் 36 அடியாக குறைந்ததால் இரை தேடி பறவைகள் குவிந்து வருகின்றன.
    மேட்டூர்:

    தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்துப்போனது. இருப்பினும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய பெய்யும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக, அதாவது 87 அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்ப படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்தானது ஒரு காலத்தில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைவிட குறையத்தொடங்கியது. இது நாளடைவில் படிப்படியாக குறைந்து மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த நவம்பர் மாதம் முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது வரை இதே அளவிலான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு 67 சதவீதம் மழை அளவு குறைந்து விட்டதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். அடுத்த பருவமழை காலம் வரை மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பையே முற்றிலும் பயன்படுத்தக்கூடிய கட்டாய நிலைக்கு டெல்டா மாவட்டங்கள் தள்ளப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 36.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 36.40 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 67 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 36 அடியாக குறைந்து விட்டதால், மேட்டூர் அணைப்பகுதியில் இரை தேடி ஏராளமான பறவைகள் குவிந்து வருகின்றன. கரையையொட்டி தண்ணீர் இருக்கும் பகுதியில் நாரைகள் மீன்களை வேட்டையாடி வருகின்றன.

    இதேபோல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள அணை மின்நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது. அணை மின்நிலையத்தையொட்டி தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் நாரைகள் மற்றும் நீர்காகங்கள் இரை தேடி முகாமிட்டு உள்ளன. இவற்றில் நாரைகள் கரையொட்டி உள்ள இடங்களிலும், நீர்காகங்கள் ஆழமான பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிச்சென்றும் மீன்களை இரையாக்கி வருகின்றன. இந்த பறவைகளிடம் இருந்து தப்பிச்செல்லும் மீன்கள், மீனவர்கள் வீசும் வலைகள் மூலம் பிடிக்கப்படுகின்றன.
    Next Story
    ×