search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணைகளை தூர் வார சொன்னால் மணலை தூர் வாருகின்றனர்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    X

    அணைகளை தூர் வார சொன்னால் மணலை தூர் வாருகின்றனர்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

    அணைகளை தூர்வாரச் சொன்னால் மணலை தூர் வாருவதால் தமிழகத்தில் நீர் ஆதாரம் குறைந்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வருசநாடு பகுதியில் செல்போன்கள் எடுப்பதில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே செல்போன் டவர் இங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிழவன் கோவில் சாலை செப்பனிடுவதில் வனத்துறையினர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இது குறித்து வனத்துறை அமைச்சருடனும் மத்திய அதிகாரிகளுடனும் கலந்து பேசி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். இதில் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வார்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய குழு ஆய்வு நடத்தி சென்றுள்ளது. இதன் அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் உரிய நிதி ஒதுக்கப்படும்.

    வைகை அணை நீர் மட்டம் கடுமையாக குறைந்து விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வைகை அணையை தூர் வார நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வைகை அணை மட்டுமின்றி தமிழகத்தில் வறண்டு கிடக்கும் அணைகளை தூர் வாராமல் மணலை தூர் வாருவதால் நீர் ஆதாரம் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார். பேட்டியின் போது மாநில பா.ஜனதா துணைத் தலைவர் சுரேந்திரன், பூசாரி கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×