search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில் ரத்து: நடுவழியில் சுற்றுலா பயணிகள் தவிப்பு
    X

    ஊட்டி மலை ரெயில் ரத்து: நடுவழியில் சுற்றுலா பயணிகள் தவிப்பு

    கல்லார் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மலைரெயில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அங்கேயே இறக்கிவிடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நடுவழியில் தவித்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதேபோல் நேற்று இரவும் ஊட்டி, குன்னூர், பர்லியார் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக இன்று அதிகாலை மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைப்பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு ரெயில் நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டது.

    இதனால் ரெயில் தண்டவாளத்தில் சிறிய, மற்றும் பெரிய பாறாங்கல் விழுந்தது. மேலும் மண் சரிவும் ஏற்பட்டதால் தண்டவாளத்தை மூடியது.

    இதற்கிடையே இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் புறப்பட்டது. ரெயிலில் சுற்றுலா பயணிகள் 200 பேர் இருந்தனர்.

    அப்போது மலைரெயில் பாதையில் மண்சரிவு குறித்து மலை ரெயில் உதவி பொறியாளர் வெள்ளியங்கிரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மலை ரெயில் ரத்து செய்ய தகவல் கொடுக்கப்பட்டது.

    அப்போது கல்லார் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மலைரெயில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அங்கேயே இறக்கிவிடப்பட்டு ரெயில் மட்டும் மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பி வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

    மண்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்றனர். அங்கு உதவி செயற்பொறியாளர் வெள்ளியங்கிரி தலைமையில் மண்சரிவால் தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கற்களை அப்புறப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, ‘‘மண்சரிவு காரணமாக ஊட்டி மலைரெயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் ரெயில் இயக்கப்படும்’ என்றனர்.

    Next Story
    ×