search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் மதுபாட்டில்கள் கொள்ளை - டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம கும்பல்
    X

    சேலத்தில் மதுபாட்டில்கள் கொள்ளை - டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம கும்பல்

    சேலத்தில் மதுபாட்டில்கள் கொள்ளையடித்து பின்னர் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் ஜங்சன் அருகில் உள்ளது ஜாகீர் அம்மாப்பாளையம். இந்த பகுதி இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ளது. இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை ஒன்று உள்ளது. கடந்த 3 நாட்களாக மதுபானக்கடைக்கு விடுமுறை என்பதால் இந்த கடைக்கு பூட்டு போடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மதுபானக்கடைக்குள் இருந்து ‘குபுகுபு’ வென புகை வந்தது. பின்னர் கடை தீப்பிடித்து எரிந்தது. இதை அறிந்த பொதுமக்கள் சிலர் உடனே சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கும், சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், வீரர்கள் பரமசிவம், உதயக்குமார், மாதேஸ்வரன், ரமேஷ்குமார் ஆகியோர் உடனே சம்பவ இடம் வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

    ஆனால் அவர்களால் கடைக்குள் செல்ல முடியவில்லை. பீர் பாட்டில்களும், மற்ற மதுபாட்டில்களும் வெடித்து சிதறியது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். சுமார் ஒருமணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. கடைக்குள் பீர் பாட்டில்கள் வைத்திருந்த பிரிட்ஜ் முழுவதும் எரிந்துவிட்டது. இதை தீயணைப்பு வீரர்கள் வெளியில் எடுத்து போட்டு தீயை அணைத்தனர்.

    இதன் பின்னர் மதுபாட்டில்களில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் பாட்டில்களை கிளறிவிட்டு தண்ணீர் அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர்.

    இந்த மதுபான கடை சிமெண்ட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கடையின் பின்பக்கம் உள்ள சுவற்றை திருடர்கள் துளையிட்டு அதன் வழியாக கைகளை விட்டு மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் திருடர்கள் சுவர் துளையிட்ட பகுதியில் மிளகாய் பொடியை தூவிவிட்டு கடைக்கு தீவைத்து தப்பி உள்ளனர்.

    மொத்தம் இந்த கடையில் ரூ.12லட்சத்து 67ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் 90 சதவீதம் மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது. பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போய் உள்ளது.

    இதுகுறித்து சேலம் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், மகாலிங்கம், ஏட்டு சவுந்தர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தை அறிந்த சேலம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெய்வநாயகி உடனே டாஸ்மாக் மதுபானக்கடைக்கு வந்து விசாரித்தார். அவர் கூறும் போது மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதை பயன்படுத்தி கொண்டு யாரோ மர்மகும்பல் மதுபான கடைக்கு வந்து சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிவிட்டு கடைக்கு தீவைத்து இருக்கிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறோம். கடையில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் திருட்டு போனது என்று விசாரித்தும் வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கடையின் சூப்பர் வைசர் வெங்கடாசலம், விற்பனையாளர்கள் சத்திரியசேகர், உமாசங்கர் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தும் வருகிறார்கள்.

    இந்த தீவிபத்தை அறிந்த திரளான பொதுமக்கள் மதுபான கடைக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். மதுபான கடை முழுவதும் மதுபாட்டில்கள் வெடித்து சிதறி கிடந்தது.

    இவற்றில் நல்ல மது பாட்டில்களும் இருந்தது. இந்த பாட்டில்களை கடை ஊழியர்கள் தனியே பிரித்து வைத்து வருகிறார்கள். இந்த பாட்டில்கள் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே எவ்வளவு சேதம் ஏற்பட்டு உள்ளது என தெரியவரும்.

    இந்த திருட்டு மற்றும் தீவைப்பு சம்பவம் சேலம் சூரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×