search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 7 பேர் பலி
    X

    திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 7 பேர் பலி

    திருவண்ணாமலை அருகே கார்-லாரி மோதிய கோர விபத்தில் புதுப்பெண் உள்பட 7 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா இளவரசனார்கோட்டை அருகே உள்ள பூமலையனூர் கிராமத்தை சேர்ந்த 10 பேர், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதற்காக காரில் நேற்றிரவு திருப்பதிக்கு புறப்பட்டனர்.

    நள்ளிரவு 1 மணியளவில் திருவண்ணாமலை அருகே உள்ள திருக்கோவிலூர் பைபாஸ் ரோட்டில் எடப்பாளையம் ரவுண்டானா அருகே வந்துக் கொண்டிருந்தனர். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து ஓசூருக்கு பிளாஸ்டிக் நாற்காலிகளை ஏற்றி சென்ற லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கி உருகுலைந்தது. காரில் இருந்த டிரைவர் உள்பட பக்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    ஏழுமலை (வயது 39),
    குமாரி (37),
    சசிகலா (27),
    சேட்டு (60),
    கோலாச்சி (57),
    தர்ஷினி (8)
    விஜயகுமார் (36).

    மேலும் வாசுதேவன் (30), வீரன் (54), ஆசான் (85) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அபயக் குரல் எழுப்பினர்.

    நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. வாகனங்களும் அதிகளவு செல்லவில்லை. இதனால் விபத்து பற்றி தாமதமாகவே திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீஸ் வாகனங்களும், ஆம்புலன்சுகளும் சைரன் சத்தத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. அதன்பிறகே, பொதுமக்கள் அங்கு திரண்டு கூடினர். மீட்பு பணி தீவிரமாக்கப்பட்டன. நொறுங்கிய காருக்குள் இருந்து பலியான 7 பேரின் உடல்களும் சதை பிய்ந்த நிலையில் மீட்கப்பட்டன.

    படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் 3 பேரின் நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்து தகவலறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்சந்திரன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருவண்ணாமலை அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் பலியானவர்களில் சசிகலா என்பவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.

    அவரது கணவர் வாசுதேவன் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இவர் திருக்கோவிலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
    Next Story
    ×