search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளியில் மண்ணால் ஆன ஜெயலலிதா உருவ பொம்மைக்கு அஞ்சலி
    X

    போச்சம்பள்ளியில் மண்ணால் ஆன ஜெயலலிதா உருவ பொம்மைக்கு அஞ்சலி

    போச்சம்பள்ளி கிராம மக்கள் சிலர் சேர்ந்து மண்ணால் ஆன ஜெயலலிதா உருவ பொம்மைக்கு பாடை கட்டி மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று அதனை புதைத்து அஞ்சலி செலுத்தினர்.
    போச்சம்பள்ளி:

    ஜெயலலிதா காலமானதை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது உருவ படத்தை வைத்து பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இதில் கட்சி பேதமின்றி பல இடங்களில் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து அவரது உருவ படத்தை தெரு, தெருவாக வைத்து கதறி அழுது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினர்.


    இதில் குறிப்பாக போச்சம் பள்ளியில் கிராமப்புற மக்களும், அ.தி.மு.க,வினரும், மாற்று கட்சியினரும் இணைந்து ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நேற்று காலை முதலே அரசம்பட்டி, பண்ணந்தூர், போச்சம்பள்ளி, புளியம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் இந்திராநகர் மக்கள் தங்கள் வீடுகளில் உணவு எதுவும் சமைக்காமலும், சாப்பிடாமலும் ஜெயலலிதாவை அடக்கம் செய்யும் வரை பட்டிணியாக இருந்தனர். இதில் பல பெண்கள் ஓப்பாரி வைத்து கதறி அழுத படியே இருந்தனர்.

    இதற்கிடையே இந்த கிராம மக்கள் சிலர் சேர்ந்து ஜெயலலிதாவின் உருவத்தை மண்ணால் பொம்மை போல செய்தனர். பின்னர் பாடை கட்டி அதில் மண்ணால் ஆன ஜெயலலிதாவின் உருவ பொம்மையை வைத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று அதனை புதைத்தனர். இந்த நிகழ்வு அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதே போல ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை செய்து வைத்து கிராம மக்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாலையில் அவரது உருவ பொம்மைக்கு இறுதி சடங்குகள் செய்தனர்.

    பின்னர் வாகனத்தில் உருவ பொம்மையை வைத்து மாயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது ஏராளமான பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத படி அந்த வாகனத்தில் பின்னால் சென்றனர்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சரபங்கா ஆற்றின் கரையோரம் கொண்டு சென்று அந்த உருவ பொம்மைக்கு சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்தனர். முன்னதாக 11 பேர் மொட்டையடித்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ பொம்மைக்கு கொள்ளி வைத்தனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். இறந்த போது அவரது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து சென்று சரபங்கா ஆற்றங்கரையோரத்தில் அடக்கம் செய்தோம். தற்போது அதே இடத்தில் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை அடக்கம் செய்துள்ளோம் என்றனர்.

    Next Story
    ×