search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுவராஜ்
    X
    யுவராஜ்

    ரெயில் மீது ஏறி செல்பி எடுத்த பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உடல் கருகினான்

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் மீது ஏறி செல்பி எடுத்த பள்ளி மாணவன் உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    நெல்லை:

    செல்போன் பயன்படுத்துபவர்களிடையே சமீப காலமாக செல்பி மோகம் அதிகரித்து உள்ளது. ஆபத்தான இடங்களில் ஆபத்தை உணராமல் எடுக்கும் ‘செல்பி’ விபரீதத்தில் முடிந்துவிடுகிறது. நெல்லையில் இன்று காலை மின்சார ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த மாணவர் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி லட்சுமி நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவர் அபுதாபி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரருக்கு 2 மகள்கள் மற்றும் யுவராஜ்(வயது17) என்ற மகன் உள்ளனர். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான்.

    காசிராஜனின் அண்ணன் மகன் திருமணம் நெல்லை சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருந்த காசிராஜன், குடும்பத்தினருடன் நேற்று இரவு நெல்லை வந்தார்.

    மாணவன் யுவராஜூம், அவரது உறவினரான சிவகாசியை சேர்ந்த முருகன் மகன் பார்த்திபன்(15) என்பவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். பார்த்திபன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று காலை யுவராஜும், பார்த்திபனும் நெல்லை ரெயில் நிலைய பகுதியில் நடந்து சென்றனர். அப்போது ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் நிறுத்தப்படும் பிளாட்பாரத்தில் அவசரகால மீட்பு ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தது. அதைப் பார்த்த யுவராஜ் அதன்மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுக்க விரும்பினார். இதையடுத்து அவர் ரெயில் பெட்டி மீது ஏறினார். அப்போது அதன் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார லைனை அவர் கவனிக்கவில்லை.

    கையை தூக்கி ‘செல்பி’ எடுத்தபோது எதிர்பாராதவிதமாக யுவராஜின் கை மின் கம்பியில் பட்டு விட்டது. இதனால் மின்சாரம் என்ஜின் மீதிருந்து கீழே தூக்கி வீசப்பட்டான்.ரெயில் நிலையத்தில் நின்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×