search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடி ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அமைச்சர்கள் வழங்கினர்.
    X
    வெடி ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அமைச்சர்கள் வழங்கினர்.

    வெடி ஆலை விபத்தில் உயிரிழந்த 19 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி

    திருச்சி அருகே துறையூரில் வெடி ஆலை விபத்தில் உயிரிழந்த 19 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவியை அமைச்சர்கள் வழங்கினர்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் தனியார் வெடி மருந்து தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 19 தொழிலாளர்கள் பலியானார்கள்.

    விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொப்பம்பட்டி, நாகநல்லூர், முருங்கப்பட்டி ஆகிய பகுதியில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

    நாகநல்லூரில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. பொதுமக்கள் மரங்களை வெட்டி ரோட்டில் போட்டனர். சாமியானா பந்தல் அமைத்து சமையலும் செய்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரவு 10.30 மணி வரையும் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லவில்லை.

    போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்அவர்கள் மறியலை கைவிட மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.

    இதனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடி கலைந்து சென்றனர். இதன்பின் மரங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சாமியானா பந்தலும் அகற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

    இதனிடையே ஆலையின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்ட வெடிமருந்து தொழிற்சாலை இயக்குனர் பிரகாசம், மேலாளர் ராஜகோபால் ஆகியோரை வருகிற 16-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் சிவகாசி, மேலூர், சென்னையில் இருந்து வந்துள்ள வெடி மருந்து கட்டுப்பாட்டு துறையினர் ஆலையின் ஒவ்வொரு பகுதியாக சென்று வெடிபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் 36 பேரின் உதவியுடன் இப்பணி நடைபெற்று வருகிறது.

    ஆலைக்குள் இருந்த கலன்களில் இருந்து நைட்ரிக் அமிலத்தை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீதம் வெடி பொருட்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எஞ்சிய பொருட்கள் இன்று அல்லது நாளைக்குள் மாற்றப்படும் என வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜை விசாரணை அதிகாரியாக நியமித்து திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர். பலத்த காயமடைந்த 4 பேருக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்த 8 பேருக்கு ரூ.25ஆயிரம் நிதியை ஆஸ்பத்திரிக்கு சென்று அமைச்சர்கள் வழங்கினர்.

    முருங்கப்பட்டி, நாகநல்லூர் கொப்பம்பட்டி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அந்த வழியாக இயக்கப்படும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டு, மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த 4 கிராமங்க்ளில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×