search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த அஜீத்குமார்
    X
    தற்கொலை செய்த அஜீத்குமார்

    என் மகன் சாவில் மர்மம் உள்ளது: போலீசார் மீது தந்தை குற்றச்சாட்டு

    சேலம் ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட மகன் சாவில் மர்மம் உள்ளதால், சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜித்குமாரின் தந்தை கூறி உள்ளார்.
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் மாது குமா ரபாளையம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகன் அஜீத்குமார் (23). இவர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்து கடந்த அக்டோபர் 24-ந் தேதி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலை அஜித்குமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று மதியம் சிறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது அங்கு வந்த சிறைவார்டன் அஜித்குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேலம் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அஜித்குமாரின் தந்தை மாது கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனது மகன் அஜித்குமார் பள்ளிபாளையம் நகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக குமாரபாளையம் வந்த மல்லசமுத்திரம் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி அவனை அழைத்து சென்றனர்.

    அதன் பின்னர் மல்லசமுத்திரத்தில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறி பொய் வழக்கு போட்டனர்.

    இதையடுத்து எங்களிடம் இருந்த நகைகளையும் அவசர தேவைக்காக அடகு கடையில் வைத்திருந்த எங்கள் நகைகளையும் கொள்ளையடித்த நகைகள் என்று கூறி பறிமுதல் செய்தனர்.

    எங்கள் மகனை விடுவிப்பதாக நகைகள் வாங்கி சென்ற போலீசார் அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதன்பின்னர் அவரை ஜாமீனில் எடுத்தோம். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தினமும் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். வாழவேண்டிய கனவில் இருந்த அவரை போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    சிறையில் வெளியே வந்தால் மீண்டும், மீண்டும் பொய் வழக்கு போட்டு தொல்லை கொடுப்பார்கள் என்று மனமுடைந்ததால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனது மகன் சாவில் மர்மம் உள்ளதால் சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×