search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு வங்கிகளில் முறைகேடாக புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டதா?
    X

    ஈரோடு வங்கிகளில் முறைகேடாக புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டதா?

    கர்நாடக அரசு என்ஜினீயர்களிடம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் ஈரோடு வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டதா? என்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசு என்ஜினீயர்கள் 2 பேர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் 2 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பெங்களூருவில் பிரபல கட்டுமான ஒப்பந்ததாரராக இருக்கும் ஈரோட்டை சேர்ந்த என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

    ஒட்டுமொத்தமாக நடந்த இந்த சோதனையில் ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் 11 கிலோ தங்கம் கணக்கில் வராமல் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட ரூ.6 கோடியில் ரூ.5¾ கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தன? என்பது பற்றி அவர்களிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது பெங்களூரு மட்டுமின்றி ஈரோட்டிலும் வங்கிகள் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் பெற்ற விவரம் தெரியவந்தது. பெங்களூருவில் பணம் மாற்றிக்கொடுத்த ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தபோது, ஈரோட்டில் 3 பேருக்கு பணம் மாற்றிக்கொடுத்ததில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் நடந்த பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது வங்கியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி வங்கி உயர்அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஈரோடு மாவட்டத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நவம்பர் 10-ந்தேதி முதல் வழங்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய் நோட்டும் யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்று எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு உள்ளது. தனியார் வங்கிகளில் இதில் என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை. வருமானவரித் துறையினரின் விசாரணை முடிவுக்கு பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்” என்றார்.

    Next Story
    ×