search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை மேலும் குறையும்: சம்மேளன மாநில தலைவர் பேட்டி
    X

    தங்கம் விலை மேலும் குறையும்: சம்மேளன மாநில தலைவர் பேட்டி

    மத்திய அரசின் கட்டுப்பாட்டால் தங்கம் விலை மேலும் குறையும் என்று தமிழ்நாடு நகை கடை உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் பேட்டியளித்துள்ளார்.
    சேலம்:

    பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

    பழைய ரூபாய் நோட்டுகளை வருகிற 30-ந் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31-ந் தேதி வரை உரிய ஆதாரங்களுடன் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருப்பு பணம் வைத்திருப்போர் வருகிற 30-ந்தேதிக்குள் அதை வருமான வரித்துறையிடம் அறிவித்து 50 சதவீத வரி செலுத்தவும், டிசம்பர் 30-ந் தேதிக்குள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க தவறும் போது கருப்பு பணத்தில் 85 சதவீதத்தில் இழக்க நேரிடும் என்று புதிய மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசின் பிடி இறுகி வருவதால் பலர் கருப்பு பணத்தில் தங்கம் வாங்கி பதுக்கி வைத்துள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே அதற்கு கடிவாளம் போடவும் மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதையடுத்து புதிய வருமான வரிகள் மசோதாவில் கணக்கில் காட்டாத பணம் மூலம் வாங்கும் தங்க நகைகள் மீது தற்போதைய வரிவிதிப்பான 30 சதவீதத்தை 60 சதவீதமாக்கவும், 25 சதவீதம் கூடுதல் வரி மற்றும் செஸ் வரி என உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது.

    கணக்கில் காட்டப்பட்ட வருமானத்தை கொண்டோ, விவசாயம் உள்ளிட்ட வரி விலக்கு பெற்ற வருமானத்தை கொண்டோ, குடும்ப சேமிப்பு கொண்டோ ? வாங்கப்பட்ட நகைகள், தங்ககட்டிகள் மற்றும் மூதாதையர் வழிவந்த நகைகள் வி‌ஷயத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவுரை எண் 1916 ன் படி வரி விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதன் படி திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் 500 கிராமும், திருமணமாகாத பெண்கள் 250 கிராமும், திருமணமான ஆண்கள் 100 கிராமும் வைத்துக்கொள்ளலாம். இந்த அளவுக்கு நகைகள் வைத்திருந்தாலும் அவை வருமானத்திற்கு பொருந்தாதவையாக இருந்தாலும் பறிமுதல் செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போன்று சட்டப்பூர்வமான வருமானத்தை கொண்டு வாங்கப்பட்ட நகைகள், தங்க கட்டிகள் எந்தளவு வைத்திருந்தாலும் கட்டுப்பாடின்றி அதற்கு பாதுகாப்பு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு நகைக்கடை உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஸ்ரீராம் கூறுகையில்,

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் தற்போது கடைகளில் 10 சதவீதம் மட்டுமே வியாபாரம் நடைபெறுகிறது.

    மூகூர்த்தங்களுக்கு தேவையான நகைகளை மட்டுமே பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். இதனால் நகை கடை வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கணக்கில் காட்டாத பணத்துக்கு வாங்கும் நகைகளுக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளதால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் தங்கத்தில் விலை இனி வரும் நாட்களிலும் குறைய வாய்ப்புள்ளது.

    வியாபாரம் இல்லாமல் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துள்ள தங்கத்தின் விலையும் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தளம் போல இரு பக்கமும் அடி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
    Next Story
    ×