search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் முடங்கி கிடக்கும் மக்கள்: ஏ.டி.எம்.களில் நள்ளிரவிலும் கூட்டம்
    X

    வங்கிகளில் முடங்கி கிடக்கும் மக்கள்: ஏ.டி.எம்.களில் நள்ளிரவிலும் கூட்டம்

    வங்கிகளுக்கு தேவையான அளவு பணம் வினியோகிக்கப்படாததால் பொது மக்கள் தினமும் வங்கி வாசலில் காத்து கிடக்கின்றனர்.
    சென்னை:

    நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பணம் புழக்கம் குறைந்தது. செல்லாத நோட்டுகள் 30-ந் தேதி வரை வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்படுகிறது.

    கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    25 நாட்களாக பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். வங்கிகளும், ஏ.டி.எம் மையங்களும் பணம் இல்லாமல் செயல் இழந்து கிடக்கின்றன.

    போதுமான அளவிற்கு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததால் வங்கிகள் பணபட்டுவாடா செய்ய முடியாமல் திணறுகின்றன. இதனால் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை.

    பழைய நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களின் கூட்டம் குறைந்த போதிலும் பணம் எடுக்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வங்கிகளுக்கு தேவையான அளவு பணம் வினியோகிக்கப்படாததால் பொது மக்கள் தினமும் வங்கி வாசலில் காத்து கிடக்கின்றனர்.

    தற்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்களுக்கு சம்பளம் போடப்பட்டுள்ளதால் வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    வங்கிகளில் பணத் தட்டுப்பாடு நீடித்து வந்த நிலையில் மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்களும் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    வாரம் ரூ.24 ஆயிரம் உச்ச வரம்பு தொகையை வங்கிகளால் வழங்க முடியாத வில்லை. அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்குகின்றனர். ஒரு சில வங்கிகளில் ரூ.4000, ரூ.6000 என கொடுக்கின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவு பணம் கிடைத்து விட்டால் வரிசையில் காத்து நிற்க வேண்டியதில்லை. பணத்தட்டுப்பாடு முழுமையாக நீங்குவதற்கு 6 மாத காலமாகும் என்று கூறப்படுகிறது.ஆனால் 30-ந் தேதிக்குள் நிலைமை ஓரளவிற்கு சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காலையில் இருந்து இரவு வரை வங்கி வாசலில் பணத்திற்கு தவம் கிடக்கும் மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் வீட்டு, வாடகை, மளிகை பொருட் கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

    புதிய ரூ.2000 நோட்டால் சில்லறை தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. புதிய ரூ. 500 நோட்டு பொருமளவில் வினியோகிக்கப்படாததால் சில்லரை தட்டுப்பாடும் நீடித்து வருகிறது.

    வங்கிகளில் நீடித்து வரும் பணத்தட்டுபாடால் காலையில் வந்து வரிசையில் நிற்பவர்கள் இரவு தான் வீடு திரும்புகிறார்கள் வங்கிகளுக்கு மதியத்திற்கு பிறகுதான் பணம் வருகிறது. ஆனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைத்து விடுகின்றனர்.

    குறைந்த அளவு வரும் பணத்திற்கு ஏற்றவாறு 200 அல்லது 300 பேருக்கு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. மற்றவர்களை மறுநாள் வருமாறு திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    பணம் வந்ததும் காத்து இருந்த மக்களுக்கு டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு வங்கிகளும் பணத்தை வழங்குகிறது. மாலை 4 மணிக்கு பிறகு தான் வங்கிகளில் பணம் வழங்கப்படுவதால் இரவு 7,8, மணி வரை மக்கள் காத்து இருந்து பெற்று செல்கின்றனர். ஒரு சில ஏ.டி.எம் மையங்களிலும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு ரூ.2000 எடுக்க முடியம் என்பதால் வரிசையில் பல மணி நேரம் காத்து நிற்கின்றனர்.கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் நள்ளிரவு 1 மணி வரை மக்கள் வரிசையில் நின்று பணம் எடுத்தனர்.

    Next Story
    ×