search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை பெய்யாததால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை: காரைக்கால் விவசாயிகள் வேதனை
    X

    மழை பெய்யாததால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை: காரைக்கால் விவசாயிகள் வேதனை

    ‘நாடா’ புயல் இன்று காலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. அப்போது காரைக்காலில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    காரைக்கால்:

    ‘நாடா’ புயல் இன்று காலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. அப்போது காரைக்காலில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து காரைக்கால் விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் 30 ஆயிரம் எக்டேர் அளவில் இருந்த விளை நிலங்கள், காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் தற்சமயம் 5 ஆயிரம் எக்டேராக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்திற்கு ஒரு சொட்டு கூட காவிரி நீர் கிடைக்கவில்லை. பருவ மழையும் கைகொடுக்கவில்லை.

    இதனால் 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் அளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டிருந்த வயல்களில் தண்ணீர் இல்லாமல் பெரும்பாலான இடங்களில் பயிர்கள் காய்ந்துவிட்டன. ‘தாய் முகம் பார்க்காத பிள்ளையும், மழை முகம் பார்க்காத பயிரும் உருப்படாது’ என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

    அதன்படி மழை இல்லாததால் பயிர்கள் கருகிவிட்டன. வங்கக்கட லில் உருவான ‘நாடா’ புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்யும் என்றும், குறிப்பாக 20 முதல் 30 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    புயல் வலுவிழந்த காரணத்தினால் 2 செ.மீ. அளவு கூட மழை பெய்யவில்லை. இந்த லேசான மழையானது காய்ந்து வரும் பயிர்களுக்கு உயிர் தண்ணீர் ஊற்றிய போன்றுதான் உள்ளதே தவிர, இந்த புயல், மழையால் எந்தவித பயனும் இல்லை. வாய்க்கால், வரப்புகளில் தண்ணீர் நிற்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் காணப்பட வேண்டும். நெல் வயல்களில் சுமார் 5 செ.மீ. அளவிற்கு தண்ணீர் நின்றால்தான் நெற்பயிர்கள் வளரும். மழை இல்லாததால் பயிர்கள் காய்ந்துவிட்டன என்றார்.

    விவசாயி க.தேவமணி கூறும்போது, “காவிரி தண்ணீரும் கிடைக்காமல், பருவமழையும் பெய்யாமல் காரைக்கால் மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்தளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன.

    எனவே ‘நாடா’ புயலால் அதிகளவு மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் வலுவிழந்ததுடன், மழையும் பெய்யாததால் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது.

    இந்த நாடா புயலால் காரைக்கால் மாவட்டத்திற்கு எந்தவித பயனும் இல்லை. பருவமழை என்பது பருவத்தில் பெய்தால்தான் விவசாயம் செய்ய முடியும். காலம் கடந்து இந்த நாடா புயல் உருவானாலும், அதனால் பெய்யும் மழையை வைத்து கொஞ்சமாவது விவசாயம் செய்யலாம் என்ற கனவு வெறும் கனவாகவே போய்விட்டது” என்றார்.
    Next Story
    ×