search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் இருந்து படப்பைக்கு தொழிலதிபரை கடத்தி சென்று கொன்று புதைத்தது எப்படி?
    X

    வேலூரில் இருந்து படப்பைக்கு தொழிலதிபரை கடத்தி சென்று கொன்று புதைத்தது எப்படி?

    வேலூரில் இருந்து தொழிலதிபரை கடத்தி சென்று கொன்று புதைத்தது எப்படி என்று ரவுடிகள் ஜெயகுமார், ராஜேஸ்வரனையிடிம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஒடுகத்தூர் குருவராஜ பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 41). தொழிலதிபர். இவர், மொத்த இரும்பு வியாபாரம் செய்து வந்தார். மேலும் சென்னை துறைமுகத்தில் பொருட்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி ஒப்பந்தமும் பெற்று தொழில் செய்து வந்தார்.

    தொழிலதிபர் ஞானசேகரன் திருமணமாகாதவர். அக்காள் அரவணைப்பில் வசித்து வந்தார். ஞானசேகரனின் அண்ணன் ராணுவத்தில் பணிபுரிகிறார். இந்த சூழலில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகொண்டா நோக்கி ஞானசேகரன் பைக்கில் சென்றார்.

    காரில் வந்த ரவுடி கும்பல் அவரை பின் தொடர்ந்தனர். இதையறிந்த ஞானசேகரன் பைக்கை வேகமாக ஓட்டி னார். அடுத்த சில நிமிடங்களில் பைக் மீது ரவுடி கும்பல் காரை மோதினர். நடுரோட்டில் ஞானசேகரன் விழுந்து படுகாயமடைந்து வலியால் துடித்தார்.

    பொதுமக்கள் காப்பாற்ற திரண்டனர். காரில் இருந்து ரவுடி கும்பலும் இறங்கினர். ரவுடிகள் அச்சுறுத்தியதால் ஞானசேகரனை காப்பாற்ற வந்த பொதுமக்கள் பின் வாங்கினர். ரவுடிகள் ஞானசேகரனை குண்டு கட்டாக தூக்கி காருக்குள் போட்டனர்.

    இதையடுத்து, தொழிலதிபர் ஞானசேகரனை கடத்தி கொண்டு ரவுடி கும்பல் காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. சினிமா பாணியில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஞானசேகரன் மாயமாகி விட்டதாக, அவரது அக்காள் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார். மேலும், ஞானசேகரன் விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்ததையடுத்து ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாக தேடி அலைந்தார்.

    அதன்பிறகே, ஞானசேகரன் கடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. தொழிலதிபர் ஞானசேகரன் கடத்தலுக்கு செம்மரக் கடத்தல் தகராறு? தொழில் போட்டியால் ஏற்பட்ட முன்விரோதம்? போன்ற காரணங்கள் கூறப்பட்டது.

    அவரை கண்டுபிடிக்க போலீசார் எந்த முனைப்பும் காட்டவில்லை. வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில், வேலூர் அடுத்த நாகநதி சிவசங்கரன், ராமாபுரம் செந்தில் ஆகியோரை கடத்தி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் சென்னை புழல் ஜெயிலில் இருந்த ரவுடிகள் ஜெய் (எ) ஜெயகுமார் மற்றும் ராஜேஷ் (எ) ராஜேஸ்வரன் ஆகிய 2 பேரையும் வேலூர் தாலுகா போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது, ஒடுகத்தூர் தொழிலதிபர் ஞானசேகரனை கடத்தியதும் இவர்களது தலைமையிலான ரவுடி கும்பல் தான் என தெரியவந்தது. கடத்தப்பட்ட ஞானசேகரனை கொன்று புதைத்து விட்டதாக ரவுடிகள் தெரிவித்தனர்.

    விசாரணையில் தொழிலதிபரை கொன்றதற்கான பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. சென்னையில் ஞானசேகரன் இரும்பு வியாபாரம் உள்பட மற்ற தொழில்களை கவனித்துக் கொண்டிருந்தபோது, ரவுடி ஜெயக்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    ரவுடிகளுடனான பழக்கம் ஞானசேகரனை தவறான பாதையில் அழைத்துச் சென்றது. ஞானசேகரனிடம் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதை அறிந்த ரவுடிகள் பறிக்க திட்டம் வகுத்தனர். இதையறிந்த ஞானசேகரன் ரவுடிகளுடனான நட்பை துண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல், ஞானசேகரனை கடத்தி பணம் கேட்டு மிரட்டினர். அடித்து, உதைத்தனர். பணம் தன்னிடம் இல்லவே இல்லை என ஞானசேகரன் கூறியதால் அவரை சித்ரவதை செய்து கொன்றனர்.

    பிறகு உடலை சென்னை அடுத்த படப்பை பகுதியில் ரவுடி கும்பல் புதைத்து விட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கொன்று புதைக்கப்பட்ட ஞானசேகரின் உடலை தோண்டியெடுக்க ரவுடிகள் ஜெயகுமார், ராஜேஸ்வரனை போலீசார் படப்பைக்கு இன்று அழைத்துச் சென்றுள்ளனர்.

    ஞானசேகரனின் உடல் அடையாளம் காணப்பட்டு விட்டால், அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். ‘‘கூடா நட்பு கேடு விளைவிக்கும்’’ என்பதற்கு ஞானசேகரனின் வாழ்க்கை பாடமாக அமைந்துள்ளது.

    Next Story
    ×