search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு ரசீது: எஸ்.எம்.எஸ் வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி
    X

    ரே‌ஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு ரசீது: எஸ்.எம்.எஸ் வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி

    ரே‌ஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு இருந்தும் பெரும்பாலான கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

    தற்போது குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுவதும் முடிவடைந்ததும் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக சிறிய எந்திரம் அனைத்து ரே‌ஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

    முறைகேட்டை தடுக்க குடும்ப அட்டைதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன.

    இதனால் ரே‌ஷன் கடையில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் எனவும் பொருட்கள் இருப்பு விவரம் எந்திரத்தில் பதிவு செய்வதால் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் சில ரே‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களுக்கு அவர்கள் வாங்கியதாக ஊழியர் ‘பில்’ போட்டு பொருட்களை கள்ள மார்க்கெட்டில் வெளியில் விற்பது தற்போது தெரியவந்துள்ளது.

    எந்திரத்தில் ‘பில்’ போடுவதால் இந்த விபரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். ஆக வந்து விடுகின்றன.

    இதுபற்றி குடும்ப அட்டைதாரர்கள் ரே‌ஷன் கடை ஊழியர்களிடம் கேட்கும் போது, எந்திரக்கோளாறு என்று கூறி சமாளித்து வருகின்றனர். கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் பொருட்களின் அளவை சரிகெட்ட இப்படி போலி பில்கள் போடுவது தெரிய வந்துள்ளது.

    இவை எந்திரத்தில் பதிவு செய்யப்படுவதால் எஸ்.எம்.எஸ். மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

    மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு ரே‌ஷன் கடையில் இதேபோல் பல குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உளுத்தம் பருப்பு வாங்கப்பட்டதாக ஏராளமானோருக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரே‌ஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே நிலைமை பல ரே‌ஷன் கடைகளில் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, முறைகேட்டை தடுக்க அரசு புதிய திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதிலும் சில ஊழியர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இப்போது வாங்கும் பொருட்கள் பற்றிய விபரம் குடும்ப அட்டைகளிலும் பதியப்படுவதால், எந்திரத்தில் பதிவான பொருட்களின் அளவுடன் ஒப்பிட்டு முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்களை கண்டு பிடிக்க வேண்டும்’. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.
    Next Story
    ×