search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
    X

    லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

    பதவி உயர்வு பெற இருந்த நிலையில் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். பணம் பறிக்க தூண்டியவரும் கைதானார்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கத்தை அடுத்த சீக்கிணாங்குப்பத்தில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தவர் செண்பகராஜ் (வயது 47). கல்பாக்கம் அருகே உள்ள பனையூர் பகுதி துணை மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றியவர் மோகன்ராஜ்.

    ஒரு ஆண்டுக்கு முன்பு உதவி பொறியாளர் மோகன்ராஜிடம், தன்னுடைய கட்டுமான நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்குமாறு செண்பகராஜ் அணுகினார். அந்த கட்டுமானத்தை பார்வையிட்ட மோகன்ராஜ், சில காரணங்களால் மின் இணைப்பு தர மறுத்துவிட்டார். இதனால் மோகன்ராஜ் மீது செண்பகராஜூக்கு முன்விரோதம் ஏற்பட்டது. அதன் பின்னர் மோகன்ராஜ், வேளச்சேரிக்கு இடமாற்றம் பெற்று சென்றார்.

    இதனிடையே கல்பாக்கம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குமரனுடன் (45), செண்பகராஜூக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தை பயன்படுத்தி வேளச்சேரிக்கு சென்ற உதவி பொறியாளர் மோகன்ராஜை மிரட்டி பணம் பறிக்க செண்பகராஜ் திட்டமிட்டார். இதையடுத்து மோகன்ராஜ் முறைகேடாக பணம் சம்பாதித்து உள்ளதாகவும், அவரை மிரட்டி ரூ.3 லட்சம் கேட்குமாறு இன்ஸ்பெக்டர் குமரனுக்கு, செண்பகராஜ் ஆலோசனை கூறியுள்ளார்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் குமரன் சில நாட்களுக்கு முன்பு மோகன்ராஜிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் மீது லஞ்ச புகார் உள்ளதால், நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 லட்சம் கேட்டதாக தெரிகிறது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குமரன் நெருக்கடி கொடுத்ததால் மோகன்ராஜ் இது குறித்து சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை (சிறப்பு புலனாய்வு பிரிவு) அலுவலகத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமரனை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மோகன்ராஜூக்கு உரிய ஆலோசனை வழங்கி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று காலை கல்பாக்கம் போலீஸ் நிலையம் வந்த மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் குமரனிடம், தற்போது வங்கியில் அதிக அளவில் பணம் எடுக்க முடியாத நிலையை கூறி ரூ.20 ஆயிரம் மட்டும் கொண்டு வந்ததாகவும், மீதி தொகையை பிறகு தருவதாகவும் கூறி பணத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து இன்ஸ்பெக்டர் குமரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் செண்பகராஜை வரவழைத்து அவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்னும் ஒரு சில மாதங்களில் இன்ஸ்பெக்டர் குமரன் பதவி உயர்வு பெற இருந்த நிலையில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×