search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
    X

    கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

    சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
    ராயபுரம்:

    சென்னை துறைமுகத்துக்கு தினமும் சரக்குகளை ஏற்றுவதற்காகவும், இறக்குவதற்காகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன. இவ்வாறு செல்லும் கன்டெய்னர் லாரிகளை மடக்கி அதிக எடையை ஏற்றிவருவதாகக் கூறி வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் வழக்கு போடுவதாக கூறப்படுகிறது.

    இதை கண்டித்து நேற்று முன்தினம் மதியம் முதல் காசிமேட்டில் உள்ள சென்னை துறைமுக நுழைவு வாயிலில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகத்துக்குள் கன்டெய்னர் லாரிகள் செல்வது நிறுத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் மாலை சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

    இது தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் ஜெயகுமார், துறைமுக பொறுப்பு கழக ஊழியர்கள் மற்றும் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எம்.எம்.கோபி தலைமையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்ற சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் கன்டெய்னரில் கூடுதலாக ஏற்றப்படும் சரக்குகள் குறித்து சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முழுமையான தீர்வு காணும் வரை கன்டெய்னர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது என போலீசார் உறுதி அளித்தனர்.

    அதை ஏற்று கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தங்களின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். அதன் பிறகு சென்னை துறைமுகத்துக்குள் கன்டெய்னர் லாரிகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. 
    Next Story
    ×