search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்களை கவர அன்னதானம்-மது பதுக்கினால் வழக்குப்பதிவு செய்யப்படும்: கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை
    X

    வாக்காளர்களை கவர அன்னதானம்-மது பதுக்கினால் வழக்குப்பதிவு செய்யப்படும்: கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை

    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை கவர அன்னதானம்-மது பதுக்கினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலையொட்டி திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கோவிந்தராஜ் தலைமையில், செலவின பார்வையாளர் சில் ஆசிஷ் முன்னிலையில் நடந்தது.

    தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது. திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகிய அனைத்திலும் தங்குவோர் விபரங்கள் சரியான பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் தவறாமல் பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தங்கள் வருகையின் நோக்கம் பற்றி தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    உள்ளூர் நபர்கள் அறைகளை பதிவு செய்தால், யாருக்காக பதிவு செய்யப்படுகிறது என்ற விபரத்தினையும், அவர்களது விபரங்களையும் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். உள்ளூர் நபர்களே தங்கினால் அதற்கான காரணத்தினையும் பதிய வேண்டும்.

    உள்ளூர் நபர்கள் தங்கும் போது அவர்களிடம் சந்தேகத்திற்கிடமாக சூட்கேஸ் மற்றும் பணப்பைகள் இருக்குமானால் அதுபற்றிய தகவல்களை உரிய காவல்துறையிடமோ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

    திருமணம் மற்றும் சமூகக் கூடங்கள் அல்லது பிற பெரிய மண்டபங்களில் பரிசு பொருட்கள் (வேட்டிகள் மற்றும் சேலைகள்) மற்றும் உணவுப்பொருட்கள் விநியோகிக்கக் கூடாது. தேர்தல் காலங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் என்ன காரணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது என்பதற்கு சரியான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அன்னதானம் என்ற பெயரில் பெரிய அளவில் உணவு விநியோகம் வழிபாட்டு தலங்களை தவிர பிற இடங்களில் நடைபெறுமானால் தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்கான உணவு வழங்குவதற்காக சந்தேகத்தை தோற்றுவிக்கும்.

    மது ஏதும் வழங்கப்பட்டாலோ அல்லது இருப்பு வைத்திருந்தாலோ காவல் துறையினரால் சோதனை செய்து வழக்குப்பதிவு செய்யப்படும். பணப்பட்டுவாடா செய்தல் போன்ற நிகழ்வுகள் ஏதும் தெரிய வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். திருமண மண்டபங்கள் உண்மையாகவே திருமண நிகழ்வுகளுக்காக பதிவு செய்யப்படுகிறதா என்பதை பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபங்களை பதிவு செய்தால் அது பற்றிய தகவல்களை உடன் தெரிவிக்க வேண்டும்.

    திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வேட்பாளர்கள் அரசியல் கட்சியினரால் மது விருந்துகள் நடத்தப்பட்டால் அதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு நடைபெற்றது எனில் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஏதாவது வாக்கு சாவடியில் இருந்து 200 மீட்டர் வட் டத்திற்குள் இருப்பின் தேர்தல் நாள் மற்றும் முதல் நாளன்று அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளருக்கு தேர்தல் பணிகளுக்காக எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது.

    கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல், 2016 பிரச்சாரங்கள் நிறைவடையும் நாளான 17.11.2016 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் இதர மாவட்டத்தினைச் சேர்ந்த எந்த அரசியல் பிரமுகரும் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களும் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்கக் கூடாது. இதர மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அரசியல் பிரமுகரும் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களும் வெளியேறி விட வேண்டும்.

    17.11.2016 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் ஆகியவை அனைத்தும் காவல்துறையினரால் சோதனை செய்யப்படும். இந்த அறிவுரைகளை தவறாது பின்பற்றி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்திட உரிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×