search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக கோவில்களில் திருடப்படும் சாமி சிலைகள் புதுவை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தல் : போலீஸ் விசாரணை
    X

    தமிழக கோவில்களில் திருடப்படும் சாமி சிலைகள் புதுவை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தல் : போலீஸ் விசாரணை

    தமிழக கோவில்களில் திருடப்படும் சாமி சிலைகள் புதுவை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    சர்வதேச சிலை கடத்தல் கும்பல் தலைவன் சுபாஷ் கபூரின் கூட்டாளியாக இருந்த சென்னை தொழில் அதிபர் தீனதயாளனை தமிழக சிலை தடுப்பு போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். அவரிடம் இருந்து ஏராளமான சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டன.

    அதில், 2 சிலைகள் புதுவையை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் கொடுத்ததாக தீனதயாளன் கூறி இருந்தார். அந்த சிலைகள் வேலூர் அருகே உள்ள மேல்பாடி கிராமத்தில் உள்ள சோமநாத ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்று தெரிய வந்தது.

    புதுவையில் உள்ள புஷ்பராஜன் வீட்டில் மேலும் சிலைகளை பதுக்கி வைத்து இருப்பதாக தெரிந்தது. எனவே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரூ.50 கோடி மதிப்புடைய 11 சிலைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் நேற்று சென்னை எடுத்து சென்றனர்.

    புஷ்பராஜன் புதுவையில் சிலைகளை பதுக்கி வைத்து அவற்றை தீனதயாளனுக்கு வழங்கி இருப்பதால் இதே போல் பல சிலைகளை புதுவையில் இருந்து மற்ற இடங்களுக்கு கடத்தி விற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

    புதுவையில் பழங்கால கலை பொருட்களை விற்கும் ஏராளமான கடைகள் உள்ளன. ஆரோவில் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கடைகளும், புதுவை நகருக்குள் 80-க்கும் மேற்பட்ட கடைகளும் இருக்கின்றன.

    இந்த கடைகளில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன. இவற்றுடன் பழங்கால சாமி சிலைகளையும் விற்கின்றனர். இந்த கடைகள் மூலம் வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

    எனவே, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    நேற்று சிலைகள் கைப்பற்றப்பட்ட வீட்டின் உரிமையாளர் வனிலா பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.

    இவரது குடும்பத்தை சேர்ந்த பலர் புதுவையில் வசிக்கின்றனர். அவர்களுக்கு சொந்தமான கலை பொருட்கள் கடையும் புதுவையின் நகர பகுதியில் உள்ளன. ஒருவேளை இந்த கடைகள் மூலமாகவும் சிலைகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே, அவர்கள் குடும்பத்துக்கு எங்கெங்கு கடைகள் இருக்கின்றன என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வனிலாவின் வக்கீல் கோகுலகிருஷ்ணன் நேற்று கூறும் போது, வனிலாவின் தாத்தா மரிதெரஸ் கொண்டப்பா கலை பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரிடம் 50-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் இருந்தன. அவர் தனது சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொடுக்கும் போது இந்த 11 சிலைகளும் வனிலாவுக்கு கொடுக்கப்பட்டதாக கூறினார்.

    ஆனால், இந்த 11 சிலைகளும் வேலூர் மேலப்பாடி சோமநாத ஈஸ்வரர் கோவிலில் திருடப்பட்டது என்று தமிழக போலீசார் கூறினார்கள். எனவே, மரிதரஸ் கொண்டப்பா குடும்பத்தினரிடம் உள்ள மற்ற சிலைகளும் திருடப்பட்டதாக இருக்குமா என்று சந்தேகிக்கின்றனர். எனவே, மற்ற சிலைகளை பற்றியும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    புஷ்பராஜனுக்கு தனது வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்த வனிலாவுக்கு சிலை கடத்தலில் சம்பந்தம் இருக்கலாம் என போலீசார் நினைக்கின்றனர். அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.

    சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட 11 சிலைகளும் வேலூர் கோவில் சிலைதானா? என்பதை பற்றி ஆய்வு செய்து உறுதி செய்ய உள்ளனர். அது உறுதி செய்யப்பட்டால் வனிலாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சர்வதேச போலீஸ் உதவியுடன் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச சிலை கடத்தல் கும்பல் தலைவன் சுபாஷ் கபூர் அடிக்கடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வந்துள்ளான். வனிலாவும் பிரான்ஸ் நாட்டில் வசிப்பதால் ஒருவேளை அவர்களுக்குள் சிலை கடத்தல் சம்பந்தமாக தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் உள்ளது. வனிலாவிடம் விசாரணை நடத்தினால் தான் இதுபற்றிய உண்மை நிலை தெரிய வரும்.

    வனிலா அடிக்கடி புதுவைக்கு வந்து செல்வார். ஆனால், அவருக்கு புதுவையில் பல வீடுகள் உள்ளன. நகர பகுதியில் உள்ள வேறு வீட்டுக்குதான் அவர் வருவார் என தெரிய வந்துள்ளது. புஷ்பராஜுக்கு வாடகைக்கு கொடுத்துள்ள அந்த வீட்டுக்கு அவர் வந்ததை இதுவரை பார்த்தது இல்லை என்று பக்கத்து வீட்டினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×